’இஸ்லாமியர்கள் குறித்து வெளியிட்ட ஏஐ வீடியோ..’ அசாம் மாநில பாஜகவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!
இஸ்லாமியர்கள் குறித்து அசாம் மாநில பாஜக வெளியிட்ட ஏஐ வீடியோவிற்கு, சமூக நல்லிணக்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
“பாஜக இல்லாத அசாம்” என்ற தலைப்பில் அம்மாநில பாஜக, ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாமியர்கள் அசாமை முழுமையாக ஆக்கிரமித்திருப்பது போலவும், மாட்டிறைச்சி விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டிருப்பது போலவும், காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ் கோகோய் உள்ளிட்டோர், பாகிஸ்தான் கொடியின் முன்னால் நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும் வீடியோ, கவனமாக வாக்களியுங்கள் என்ற வாசகத்தோடு நிறைவு பெறுகிறது.
இந்த வீடியோ விஷத்தை பரப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், வழக்கம்போல் நீங்கள் மவுனமாக இருக்கப்போகிறீர்களா என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஏஐ வீடியோ குறித்து காவல் துறையிடம் புகாரளிக்கப்போவதாக, அசாம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதேபோல் ஏஐ வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள AIMIM தலைவர் அசாதுதீன் ஓவவைசி, இது வெறுக்கத்தக்க இந்துத்துவா சித்தாந்தத்தின் உண்மையான வடிவம், பாஜக இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பையே ஒரு பிரச்சனையாக பார்க்கிறது என என சாடியுள்ளார்.