“Some more jobs gone!” மனிதர்களின் வேலையை பறிக்கும் AI.! அடுத்த டார்கெட் மெஹந்தி ஆர்ட்டிஸ்ட்டா?
திருவிழா... விசேஷ நாட்கள்... திருமணம் என்றாலே, புது புது ஆடைகளை அணிந்து கொள்வதுடன், டிசைன் டிசைனாக கை நிறைய மெஹந்தி இட்டுக்கொள்வது என்பது பலருக்கும் கொள்ளைப் பிரியம். இதற்காக தேடித் தேடி மெஹந்தி ஆர்ட்டிஸ்டை பிடிக்கும் கதைகளும் உண்டு. ஆனால், தற்போது மெஹந்தி போடுவதற்கும் மெஷின் வந்துவிட்டதாக இணையத்தில் பரவும் வீடியோ பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தனது X தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒருவர் தனது கையை ஒரு மெஷினுக்குள் வைக்க, அந்த மெஷின் அவரது கையில் மெஹந்தி டிசைனை வரைவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை “Some more jobs gone” என்ற கேப்ஷனுடன் கோயங்கா பதிவிட்டிருக்கிறார். இது இணையவாசிகளிடையே பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்த வீடியோவை பலரும் AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், சிலர் இது உண்மையான வீடியோ என்றும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே AI தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியால், மனிதர்களுக்கு தொடர்ந்து வேலை இழக்கும் அபாயம் உருவாகி வருகிறது. இந்நிலையில், தற்போது ஆட்டோமேஷன் மூலம் மெஹந்தி போடும் மெஷின் வந்துவிட்டால், மெஹந்தி போடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் மெஷின் வேகமாக மெஹந்தி போட்டாலும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப படைப்பாற்றலுடன், கஸ்டமைஸ்டு டிசைன்களை மனிதர்களைப் போல அதனால் உருவாக்க முடியுமா என்றும்.. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தேவையான ஒன்றுதான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அதே அபரிதமான வளர்ச்சி மனித குலத்திற்கு எதிராக மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உண்மையிலேயே மெஹந்தி போடுவதற்கான மெஷின் வந்துவிட்டதா? அல்லது தொழிலதிபர் கோயங்கா வெளியிட்ட வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டதா? என்பது குறித்த நம்பகமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
