நாய்க்கு ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம்: கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக மூவர் கைது
ரூ.7 லட்சம் செலவு செய்து செல்ல நாயின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் சிராக் படேல் மற்றும் உர்விஷ் படேல். இருவரும் தாங்கள் வளர்த்து வந்த நாய்க்கு, 'அப்பி' என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகின்றனர்.இவர்கள் தங்கள் நண்பர் திவ்யேஷ் மெஹரியாவுடன் இணைந்து, நேற்று முன்தினம் நாயின் பிறந்தநாள் விழாவை ரூ.7 லட்சம் செலவுசெய்து கோலாகலமாக கொண்டாடினர்.
குடும்பத்தினர் மட்டுமின்றி ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்ற விழாவில், பிரபல நாட்டுப்புற பாடகரின் இசை நிகழ்ச்சி மற்றும் விருந்தும் நடந்தது.கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் ஆட்களை சேர்த்து விழா நடத்தியதுடன் அதில் பங்கேற்றவர்கள் முகக் கவசம், சமூக விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றவில்லை.
இதையடுத்து தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரர்கள் மற்றும் நண்பர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.