'விஸ்வாசத்துக்கு மறுபெயர்', 'சோனியாவின் வலது கை'; யார் இந்த அகமது படேல்?

'விஸ்வாசத்துக்கு மறுபெயர்', 'சோனியாவின் வலது கை'; யார் இந்த அகமது படேல்?

'விஸ்வாசத்துக்கு மறுபெயர்', 'சோனியாவின் வலது கை'; யார் இந்த அகமது படேல்?
Published on

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவரான காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் இன்று காலை உயிரிழந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டார். நுரையீரல் கடுமையாகப் பாதிக்ககப்பட்ட நிலையில், அந்தப் பாதிப்பு மற்ற உடல் உறுப்புகளும் பரவிய தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அகமது படேல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார். இவரின் மறைவு காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 "நான் ஒரு சக ஊழியரை இழந்துவிட்டேன், அவரின் முழு வாழ்க்கையும் காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவரது விஸ்வாசமும் அர்ப்பணிப்பும், கடமையில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும், அவர் எப்போதும் உதவியாக இருப்பதும், அவரது தாராள மனப்பான்மையும் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திய அரிய குணங்கள். ஈடுசெய்ய முடியாத தோழர், உண்மையுள்ள சக ஊழியர் மற்றும் நண்பரை நான் இழந்துவிட்டேன்" என்று சோனியா காந்தி தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார். 

"இது ஒரு சோகமான நாள். ஸ்ரீ அகமது படேல் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தார். அவர் காங்கிரஸை வாழ்ந்து சுவாசித்தார், கட்சியுடன் அதன் மிகக் கடினமான காலங்களில் நின்றார். அவர் ஒரு மிகப்பெரிய சொத்து" என ராகுல் காந்தி கூறியிருக்கிறார். ஆம், ராகுல் கூறியதுபோல அகமது படேல் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்து எனலாம். அதைவிட, சோனியா காந்தியின் `விஸ்வாசம்', 'உற்ற நண்பர்' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

 யார் இந்த அகமது படேல்?!

இந்திரா காந்தி காலத்திலேயே அரசியலுக்கு வந்தாலும், ராஜீவ்காந்தி காலத்தில் இருந்து காங்கிரஸின் தூணாக இருந்து வருகிறார் இந்த குஜராத்காரர். குஜராத்தின் 'பிராமல்' எனும் குக்கிராமத்தில் பிறந்த அகமது படேல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மற்றும் இளைய தலைவர்களின் 'பாலம்' ஆக செயல்பட்டு வந்தார். 1985-ல் ராஜீவ் காந்திக்கு நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றியபோது அவரின் நம்பிக்கையாக மாறினார் அகமது. அதுவே, அவரை சோனியா காந்தியின் நண்பராக மாற்றியது. ராஜீவ் காந்தி இறந்தபிறகு 1998 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவராக சோனியா பதவியேற்றபோது, அனைத்துமாக இருந்து அவரின் அரசியல் வாழ்க்கையை வழிநடத்தியவர் அகமது படேல்.

சோனியா சந்தித்த சிக்கலான தருணங்களில் அவருக்கு கைகொடுத்தது அகமது படேலின் வழிகாட்டுதல்கள்தான். இதனால் இந்தக் காலகட்டங்களில் இருந்து காந்தியின் குடும்பத்துடன் நெருக்கமாக பழக்கூடிய நபரானார். சோனியா காந்தியின் 'வலது கை' எனக் குறிப்பிடும் அளவுக்கு நெருக்கமானார். இறக்கும் முன்பு வரை சோனியாவின் வலது கையும் அவர்தான். அரசியல் ஆலோசகரும் அவர்தான்.

அகமது படேல் சுறுசுறுப்பான, கவர்ந்து இழுக்கும் பேச்சுத் திறன் கொண்ட அரசியல்வாதி அல்ல. மற்றத் தலைவர்களைபோல மக்கள் செல்வாக்கும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆனால், திரைக்குப் பின்னால் இருந்து செயல்படும் மாஸ்டர் மூளை கொண்ட மனிதர். இதனால், தான் பல தசாப்தங்களாக காந்தி குடும்ப நபர்களுக்குப் பிறகு காங்கிரஸில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த நபராக வலம்வந்தார் அகமது படேல்.

செல்வாக்கு மிக்க நபர் என்றாலும், தனது அதிகாரத்தை ஒருபோதும் அளவுக்கு மீறி தவறாக பயன்படுத்தில்லை. எப்போதும் எச்சரிக்கையுடனேயே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினார். இது ஓர் அரிய குணமாகும். இந்தக் குணமே இவரை மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியதும், காந்தி குடும்பத்திடம் நெருங்கிப் பழக உதவியது. காங்கிரஸும், குறிப்பாக அதன் தலைவர் சோனியா காந்தியும் பல தசாப்தங்களாக கட்சியை நடத்த நம்பியிருந்தது அகமது படேலைதான் என்றால் அது மிகையாகாது. சிக்கலான காங்கிரஸ் அமைப்பை நன்கு அறிந்து வைத்து பிரச்னை வரும்போதெல்லாம் திரைக்கு பின்னால் இருந்து அதில் எளிதில் சமாளிக்கும் திறன்கொண்டவர். 

காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு 10 வருடங்கள் ஆட்சி நடத்தியபோது கட்சிக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான முக்கிய இணைப்பாகவும், அமைப்பில் முக்கிய முடிவெடுப்பவர்களில் ஒருவராகவும் இருந்தார். ராகுல் காந்திக்கும் தனக்கும் உரசல் ஏற்பட்டபோது கூட, இளம் தலைவர்களுக்கும், மூத்தத் தலைவர்களுக்கும் பாலமாக செயல்பட்டார்.

கட்சியின் கடினமான காலங்களில் எங்கும் செல்லாமல் காங்கிரஸிலேயே இருந்தார். ராகுல் காந்தி குறிப்பிட்டதுபோல, காங்கிரஸை மட்டுமே சுவாசமாக கொண்டு வாழ்ந்தார் அகமது படேல். கட்சிக்கும், காந்தி குடும்பத்துக்கும் மிகவும் விஸ்வாசமாக இருந்தார். விஸ்வாசம் என்றால் காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி கைகாட்டுவது இந்த 71 வயது குஜராத்காரரைத் தான். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அகமது படேலுக்கு வெளிக்கட்சி நண்பர்களும் அதிகம். மற்ற கட்சி நபர்களுடன் சோனியா இவ்வளவு உறவுகொண்டிருப்பதுக்கு முக்கியக் காரணம் அகமது படேல். அவரின் நட்பு எல்லை அதிகம். அதனால் தான் இன்று அவரின் மறைவுக்கு மற்ற கட்சித் தலைவர்கள் தங்கள் இரங்கலை வேதனையாக பதிவு செய்து வருகின்றனர்.

 28 வயதில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெருமை அகமது படேலுக்கு உண்டு. 1980 மற்றும் 1984 தேர்தல்களில் குஜராத்தின் பரூச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். அதேபோல் 1984ம் ஆண்டே காங்கிரஸின் துணைச் செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்திருக்கிறார். கடைசியாக 2017ல் குஜராத்தில் இருந்து அகமது படேல் மாநிலங்களவை எம்பியாக தேர்வானார். இறக்கும்போது கூட, காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பதவி வகித்த பெருமை அகமது படேலுக்கு உண்டு.

 RIP அகமது படேல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com