வேளாண் சட்டம் வாபஸ்: ஆடிப்பாடி உற்சாகமாக டெல்லியில் இருந்து விடைபெறும் விவசாயிகள்

வேளாண் சட்டம் வாபஸ்: ஆடிப்பாடி உற்சாகமாக டெல்லியில் இருந்து விடைபெறும் விவசாயிகள்
வேளாண் சட்டம் வாபஸ்: ஆடிப்பாடி உற்சாகமாக டெல்லியில் இருந்து விடைபெறும் விவசாயிகள்

தங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டே, ஒரு வருடமாக டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

சில இடங்களில் கீர்த்தன் என்று சொல்லப்படும் சீக்கிய மதத்தினரின் பஜனை, சில இடங்களில் பஞ்சாபில் பிரபலமான பாங்க்ரா நடனம், மற்றும் முகாமிட்டு இருந்த அத்தனை எல்லைப் பகுதிகளிலும் வெற்றி முழக்கங்கள் என பலவிதமான கொண்டாட்டங்களுடன் விவசாயிகளின் டெல்லி முற்றுகையை முடிவுக்கு வந்துள்ளது.

ஒருபக்கம் கூடாரங்களை அகற்றிக் கொண்டே, இன்னொருபுறம் தங்களுடன் போராடிய பிற விவசாய நண்பர்களுக்கு பிரியாவிடை அளிப்பது என தங்களுடைய தலைநகர் முற்றுகையை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். காசிப்பூர், சிங்கு மற்றும் திகிரி ஆகிய எல்லைகளில் உள்ள ஆயிரக்கணக்கான கூடாரங்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.


வழி நெடுகிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள்:

மேளதாளத்துடன் விவசாயிகள் தங்களுடைய கிராமங்களுக்கு திரும்பும்போது, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மாலைகள் சூட்டியும் தடபுடலாக மரியாதை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வீடு திரும்பி இருப்பதாகவும், பஞ்சாப், உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து போராட்டக் களத்திற்கு வந்தவர்கள் படிப்படியாக திரும்புவார்கள் எனவும் வேளாண் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வரலாறு காணாத வெற்றியை கொண்டாடுவோம் என விவசாயிகள் தங்கள் உற்றார், உறவினரை சந்திக்க கிராமங்களுக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். காசிப்பூர் எல்லையில் உள்ள கூடாரங்கள் அடுத்த சில நாட்களில் முழுவதுமாக அகற்றப்படும் எனவும் அனைத்து விவசாயிகளும் அந்தப் பகுதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் வெளியேறி விடுவார்கள் எனவும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.

சிங்கு எல்லையில் மிகவும் அதிக எண்ணிக்கையில் கூடாரங்கள் உள்ளதால், அவற்றை அகற்ற ஒருவாரம் வரை ஆகலாம் என கருதப்படுகிறது. சிங்கு எல்லையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் தங்கியிருந்தனர். திகிரி எல்லையில் கூடாரங்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அங்குள்ள விவசாயிகள் ஒருசில நாட்களில் வெளியேறி விடுவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

காலியாகும் முகாம் கிராமங்கள்:

டிராக்டர்கள், வேன்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தங்களுடைய பொருட்களை விவசாயிகள் ஏற்றிச் செல்வதால் எல்லைப் பகுதிகள் பரபரப்பாக காணப்படுகின்றன. ஒரு வருடமாக விவசாயிகள் எல்லைகளில் உள்ள முகாம்களில் தங்கி இருந்ததால், அவர்கள் பயன்பாட்டுக்காக அங்கே வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கட்டில்கள், நாற்காலிகள், பெட்டிகள், படுக்கைகள், தலையணைகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் வீடு காலி செய்வது போல வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன.

கூடாரங்களை பிரித்து கட்டுமான பொருட்களை விவசாயிகள் டிராக்டர் வாகனங்களில் ஏற்றி தங்களுடைய கிராமங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். விவசாயிகளுக்கு உணவு தயாரிக்க சேமித்து வைக்கப்பட்டிருந்த கோதுமை மாவு, அரிசி, காய்கறிகள் மற்றும் பருப்பு போன்ற பொருட்களும் போராட்டக் களத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன.

சாலைகள் திறப்பு நிம்மதியில் எல்லைவாசிகள்:

விவசாயிகள் எல்லைப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் முகாமிட்டதால், அந்தப் பகுதிகளில் ஒரு வருடமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டால், அவர்களை தடுக்க போலீசாரும் பல அடுக்கு தடுப்புகளை உண்டாக்கி இருந்தார்கள். முகாம்கள் அகற்றப்படும் நிலையில், இந்த தடுப்புகளும் படிப்படியாக அகற்றப்படுகின்றன.

இந்த எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து ஓரளவு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூடாரங்கள் அகற்றப்பட்ட பிறகு சாலைகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என போலீசார் தெரிவித்தனர். இன்னமும் இந்த எல்லை முகாம்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கியிருப்பதால், போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது. விவசாயிகள் முழுமையாக வெளியேறிய பிறகு, போலீசார் பிற பணிகளை கவனிக்க வேறு இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

போக்குவரத்து விரைவில் சீராகும் என அந்தப் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக இவர்கள் ஒரு பகுதி சாலைகளை பயன்படுத்த முடியாமல், பயணிக்க அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அதேபோல எல்லைப்பகுதிகளில் உள்ள பலர் தங்களுடைய வணிக நிறுவனங்களை நடத்தமுடியாமல் புகார் அளித்து வந்த நிலையில், தற்போது அவர்களுடைய போக்குவரத்து பிரச்சனையும் தீரும் என நம்பிக்கை பிறந்துள்ளது.

-- கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com