உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்டீரிமிங் செய்தவாறே தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் முன்னா குமார். கடந்த சில வருடங்களாக ராணுவத்தில் வேலை சேர்வதற்காக பல முயற்சி எடுத்திருக்கிறார். 17-ம் வயதில் இருந்தே முன்னா, இதற்காக முயற்சி செய்த நிலையில் ஒவ்வொரு முறையும் எழுத்துத் தேர்வில் பங்கேற்றுள்ளார். ஆனால் அவரால் ஒருமுறையும் கூட தேர்ச்சி பெறமுடியவில்லை. தற்போது தேர்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பை முன்னா கடந்துவிட்டதாக தெரிகிறது. எனவே ராணுவத்தில் இனிமேல் சேரமுடியாது என்பதால் முன்னா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். எவ்வளவு முயன்றும் இதனை அவரால் மறக்க முடியவில்லை. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ செய்தவாறே முன்னா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன்னா தற்கொலை செய்ததை பலரும் லைவ் வீடியோவில் பார்த்துள்ளனர். ஆனால் உடனடியாக இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான நண்பர்கள் தற்கொலையை நேரலையாக பார்த்தபோதும் நண்பனை காக்க அவர்கள் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
இதனிடையே முன்னாவின் அறையில் இருந்து போலீசார் இரண்டு பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் தற்கொலை செய்வதற்காக தனது பெற்றோர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். கடிதத்தின் முடிவில் ‘ஜெய் ஹிந்த்’ எனவும் முன்னா எழுதி வைத்துள்ளார். போலீசார் வருவதற்கு முன்னே முன்னாவின் உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். ஆனால் அதன்பின் வந்த போலீசார் முன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் முன்னாவின் தற்கொலை குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.
(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)