அக்னிபாத் திட்டம் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

அக்னிபாத் திட்டம் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

அக்னிபாத் திட்டம் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!
Published on

மத்திய அரசு அறிமுகப்படுத்திய “அக்னிபாத் திட்டம்” நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ளது. ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அக்னிபாத் திட்டம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

1. அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் (ராணுவம், விமானப்படை, கடற்படை) 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும்.

2.17.5 வயது முதல் 21 வயதிலான ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தில் இணையலாம். இந்த வருடத்தில் இணைபவர்களுக்கு மட்டும் வயது வரம்பு 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம் ஆகும். உடற்தகுதியை பொறுத்தவரை ராணுவத்தில் சேருவதற்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபாத் திட்டத்தில் சேருபவர்களுக்கும் பொருந்தும்.

3. அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். ஆனால் இந்த சம்பளம் முழுமையாக வழங்கப்படாது.

4. இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு, சேவா நிதியாக மத்திய அரசின் பங்களிப்புடன் (அதே 30% அளவிலான தொகை) பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.

5. மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர். பணிக்காலம் முடிவடைந்ததும் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

6. பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபாத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும்.

7. பணியின் போது அக்னிபாத் வீரர்கள் உடல் ஊனமுற்றால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய முழு சேவை நிதியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும். இதுதவிர, ஊனத்தின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு ரூ.46 லட்சம் வரை வழங்கப்படும்.

8. இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறையில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9. மேலும், இரு துணை ராணுவப் படைகளில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு வயது வரம்பு சலுகையும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் அக்னிபத் வீரர்கள் துணை ராணுவப் படைகளில் சேர 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகையும், முதன்முறையாக அக்னிபத் திட்டத்தில் சேருவோருக்கு 5 ஆண்டுகள் சலுகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் திறமை மிக்க அக்னி வீரர்களுக்கு விமான போக்குவரத்து துறையிலும் பணி முன்னுரிமை வழங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com