
கேரளா பாலக்காடு மாவட்டம் திருச்சூரை சேர்ந்தவர் திருநம்பியான பிரவீன் நாத். திருநம்பியும், பாடி-பில்டருமான இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ்டர் கேரளா போட்டியில் பங்குபெற்று, கேரளா மாநிலத்தின் முதல் மிஸ்டர் டிரான்ஸ்மேனாக மாறி வரலாறு படைத்தார்.
அதுமட்டுமல்லாமல், 2022-ல் மும்பையில் நடைபெற்ற சர்வதேச பாடி-பில்டிங் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளராகவும் முன்னேறி அசத்தியிருந்தார்.
இந்நிலையில், பிரவீன் நாத்-ம், மாடலும், மிஸ் மலபார் அழகி போட்டியின் வெற்றியாளருமான திருநங்கை ரிஷானா ஐஷுவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மற்ற காதலர்களை போல், தங்களின் காதலை திருமணமாக மாற்றவிரும்பிய இந்த காதல் ஜோடி, இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று மனப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டனர்.
மற்ற காதலர்களை போலவே இவர்களுடைய வாழ்க்கையும் சிறப்பாக சென்றது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு, காதலியுடனான சிறிய ஊடலின் காரணமாக, தனது சமூக வலைதள பக்கத்தில் காதலி ரிஷானாவுடனா உறவு முறிந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து தான் பதிவிட்ட அந்த பதிவை நீக்கிய பிரவீன், அந்த பதிவானது அப்போதைய கோபத்தின் சூட்டில் பதிவிடப்பட்டது என்றும், மற்றபடி நாங்கள் இணைந்து தான் இருக்கிறோம் என்றும் கூறி மாற்றுப்பதிவை பதிவிட்டுள்ளார்.
ஆனால் அவருடைய மாற்றுப்பதிவையும் மீறி, பிரவீன் நாத்தின் பிரேக்-அப் பதிவானது, தொடர்ந்து அதிகமாக ஷேர் செய்யப்பட்டும், ட்ரோல் செய்யப்பட்டும் வந்ததாக கூறப்படுகிறது. எல்லா காதலர்களை போலவும், சண்டையிட்டு அப்போதைய மன ஆறுதலுக்காகவும், கோபத்தின் ஆற்றுதலுக்காகவும் பதிவிட்ட ஒரு பதிவால், பிரவீன் நாத்தின் அன்றாட வாழ்வே மன அழுத்தமாக மாறியதாக கூறப்படுகிறது.
இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த பிரவீன், கடந்த வியாழன் அன்று திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றூள்ளார். வாயில் நுரை தள்ளியபடி வீழ்ந்து கிடந்த அவருடைய உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
சமூகவலைதள தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த நிலையில், விவாகரத்து குறித்த செய்திகளால் தானும், தன் மனைவி இருவரும் அதிர்ச்சியடைந்ததாக பிரவீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இறப்பதற்கு முன்பு பேசியிருக்கும் அவர், "எல்லா காதலர்களை போலவும், உணர்ச்சிவசப்பட்டபோது அந்த பதிவு போடப்பட்டது. ஆனால் உடனடியாக அந்த முகநூல் பதிவை நான் திரும்பப் பெற்றேன். இருப்பினும் என்னுடைய பதிவை நீக்கிய பிறகும், அதன் ஸ்கிரீன் ஷாட்கள் அதிகமாக ஷேர் செய்யப்பட்டன ” என்று அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் தான், அதிகமான வதந்தி மற்றும் ட்ரோல் பதிவுகளால் மன உளைச்சலில் பிரவீன் இறந்ததாக கூறப்படுகிறது.
காதலன் பிரவீன் நாத் தற்கொலை செய்து இறந்த நிலையில், அவருடைய காதலியான ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷானா, அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
மிஸ்டர் கேரளா டிரான்ஸ்மேன் என எல்லோராலும் அழைக்கப்படும் பிரவீன், பொதுவாக மாற்றுபாலினத்தவர்கள் சமூகத்தில் சந்தித்துவரும், பாலுணர்வு சார்ந்த கேலி, கிண்டல்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தான் வந்துள்ளார். அனைத்து சவால்களையும் மீறி சமூகத்தோடு போராடி தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்ட பிரவீன், சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் உதவ, திருச்சூரை தளமாகக் கொண்ட LGBTQIA+ அமைப்பான Sahayathrika உடன் இணைந்து பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தைரியமாக சமூக பிரச்சனைகளை எதிர்கொண்டு, ஆக்டிவாக செயல்பட்டு வந்த பிரவீன் நாத், தற்கொலை செய்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என, நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.