டோக்லாம் அருகே சீன கிராமம்!.. செயற்கைகோள் புகைப்படம் குறித்து இந்தியா கொடுத்த விளக்கம்

டோக்லாம் அருகே சீன கிராமம்!.. செயற்கைகோள் புகைப்படம் குறித்து இந்தியா கொடுத்த விளக்கம்
டோக்லாம் அருகே சீன கிராமம்!.. செயற்கைகோள் புகைப்படம் குறித்து இந்தியா கொடுத்த விளக்கம்

சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதி அருகே சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி இருப்பதாக வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள் குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பூடான் எல்லையில் அமைந்திருக்கும் டோக்லாம் பகுதியில் இந்திய- சீன ராணுவத்தினர் இடையே வெடித்த மோதல் இரு மாதங்கள் வரை நீடித்தது. அந்தப் பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அப்போது தகவல் வெளியானது. இந்த நிலையில், டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியான செயற்கைக்கோள் படங்களில், சீனா ஒரு கிராமத்தையே உருவாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மேக்ஸாா் என்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் படம்பிடித்த செயற்கைக்கோள் புகைப்படங்களில், டோக்லாம் கிழக்கு திசையில் 9 கிலோமீட்டர் தொலைவில் சீனா சாா்பில் கிராமம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. பாங்டா என்று பெயரிட்டுள்ள இந்தக் கிராமம் பூடான் நிலப்பரப்புக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இது  பூடானிடம் இருந்து சீனா அபகரித்த நிலம் என்றும் இக்கிராமத்தில் இருந்து இந்தியாவின் படைகளை நேரடியாகக் கண்காணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டோக்லாம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் குறித்து விளக்கமளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ''இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து நகர்வுகளையும் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது'' என்று கூறினார்.

ராணுவ தலைமையக வட்டாரங்கள் என்டிடிவியிடம் கூறுகையில், "இந்திய இராணுவம் அதன் எல்லையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளிலும், குறிப்பாக நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்தவொரு அசாதாரண சூழலையும் சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது'' என்று உறுதியளித்துள்ளன.

இதையும் படிக்க: ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகள் எத்தனை? - மத்திய ரயில்வே அமைச்சகம் பதில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com