ஹிண்டன்பர்க் வரிசையில் அடுத்த புயலை கிளப்பியது ஃபோர்ப்ஸ்; இந்தமுறை குறி வினோத் அதானிக்கு!

ஹிண்டன்பர்க் வரிசையில் அடுத்த புயலை கிளப்பியது ஃபோர்ப்ஸ்; இந்தமுறை குறி வினோத் அதானிக்கு!
ஹிண்டன்பர்க் வரிசையில் அடுத்த புயலை கிளப்பியது ஃபோர்ப்ஸ்; இந்தமுறை குறி வினோத் அதானிக்கு!

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, ஃபோர்ப்ஸும் அதானி குழும பங்குகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி குழும விவகாரம் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அடுத்த குறியாய், கௌதம் அதானியின் சகோதரர் மீது விழுந்துள்ளது. கெளதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, ஃபோர்ப்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அடுத்த புயலைக் கிளப்பியுள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களைக் கவனித்து வரும் வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த மறைமுக கட்டுப்பாட்டில் உள்ள 'பினாக்கிள்' என்ற வணிக முதலீட்டு நிறுவனத்தின் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த விடிபியில் கடன் பெற்றுள்ளார்.

இந்தக் கடன் உக்ரைன் - ரஷியா போரின்போது 2021 ஏப்ரலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ’பினாக்கிள்’ நிறுவனம் கடனாகப் பெற்ற 263 மில்லியன் டாலர்களில் 258 மில்லியன் டாலர்களை பெயரிடப்படாத பங்குகளுக்காக அதானி குழுமம் ஒதுக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகைக்கான உத்தரவாதமாக ஆஃப்ரோ ஏசியா (Afro Asia) மற்றும் வேர்ல்டுவைடு (Worldwide) ஆகிய இரு நிறுவனங்களை பினாக்கிள் குறிப்பிட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்குச் சொந்தமானது என்று ஃபோர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அதானி குழுமத்துக்கான பங்குகளை பிற நிறுவனங்கள் மூலம் பெற்று, அதனை அதானி குழும பங்குகளில் முதலீடு செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், அதானி பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புயலை கிளப்பிய ஜார்ஜ் சோரோஸ் பேச்சு! 

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அதானி - பிரதமர் மோடி விவகாரம் குறித்து அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோராஸ் பேசியிருப்பது அரசியல் அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. ஜெர்மனியில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஜார்ஜ் சோராஸ், ”அதானி விவகாரத்தில் மோடி தற்போது மௌனமாக இருக்கிறார். அவர் அமைதியாகவே இருந்தால் அதானி விவகாரம், கூட்டாட்சி அரசின் மீதான மோடியின் தலைமையைக் கணிசமாக பலவீனப்படுத்தும். நிறுவன சீர்திருத்தங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும். இது இந்தியாவில் ஜனநாயக செயல்முறையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும்.

எனவே, பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஏற்கெனவே, கடந்த 2020ஆம் ஆண்டில் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியை, இவர் தாக்கிப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவருடைய குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மிகவும் காட்டமாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள நிலையில், ஜார்ஜ் சோராஸின் பேச்சும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com