மாணவர்களை பள்ளிக்கு பைபிளை கொண்டு வர கூறுவதா? இந்து அமைப்புகள் எதிர்ப்பு

மாணவர்களை பள்ளிக்கு பைபிளை கொண்டு வர கூறுவதா? இந்து அமைப்புகள் எதிர்ப்பு
மாணவர்களை பள்ளிக்கு பைபிளை கொண்டு வர கூறுவதா? இந்து அமைப்புகள் எதிர்ப்பு

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை கொண்டு வருமாறு ஒரு பள்ளி நிர்வாகம் கூறியதற்கு கர்நாடகாவில் உள்ள இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கிளாரன்ஸ் என்ற பெயரில் கிறிஸ்தவ சிறுபான்மைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ள சில விதிமுறைகள்தான் தற்போது பிரச்னைக்கு காரணமாகி இருக்கிறது.

அந்த விண்ணப்பத்தில், "உங்கள் மகன்/மகள் பள்ளியில் காலை வேளையில் நடைபெறும் வேதப்பாடம் பயிற்றுவிக்கப்படும் வகுப்பில் கலந்துகொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள்; பைபிளையும், கிறிஸ்தவ வேதம் சார்ந்த புத்தகத்தையும் பள்ளிக்கு கொண்டு வருவதையும் நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விதிமுறைகளுக்கு கர்நாடகா இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து இந்து ஜனஜாக்ருதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் கிறிஸ்தவர் அல்லாத மாணவர்களும் பயில்கின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அவர்களையும் பைபிளை படிக்குமாறு வலியுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செயலை பள்ளி நிர்வாகம் கைவிட வேண்டும்" என்றார்.

இருந்தபோதிலும், தனது நிலைப்பாட்டில் கிளாரன்ஸ் பள்ளி நிர்வாகம் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கு பைபிளை மையப்படுத்திய கல்விதான் போதிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்னை இப்போதுதான் ஓரளவுக்கு ஓயந்திருக்கும் சூழலில் தற்போது பைபிள் விவகாரம் மீண்டும் புயலை கிளப்பிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com