111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா

111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா
111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா

பீகாரில் 111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலியாக ஒடிசாவில் விற்பனை செய்யப்படும் லிச்சி பழங்களில் உள்ள நச்சு உள்ளடக்கத்தை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் சில காரணங்களும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உடலில் குறைந்தளவு குளுக்கோஸ் அளவு கொண்ட குழந்தைகள், இரவில் வெறும் வயிற்றுடன் தூங்கிவிட்டு, காலையில் லிச்சியை வெறுமனே சாப்பிட்டால் மூளை காய்ச்சல் ஏற்படக் கூடும். ஆனால், லிச்சி பழங்கள் மட்டுமே இதற்கு காரணமென்று கூறிவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முசாபர்புர் பகுதியில் பெருமளவில் லிச்சி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அந்த பகுதியை சுற்றிலுள்ள கிராமங்களில் லிச்சி பழத்தோட்டங்களை சர்வ சாதாரணமாக காண முடியும்.

இதுவரை பீகாரில் 111 குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், ஒடிசா சுகாதார அமைச்சர் நாபா கிஷோர் தாஸ் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் லிச்சி பழங்களில் உள்ள நச்சு உள்ளடக்கத்தை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com