குடியுரிமை மசோதா சர்ச்சைக்கிடையில் வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் தனது இந்திய பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். வேறு சில முக்கிய பணிகள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாக வங்கதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக 3 நாள் பயணமாக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் இந்தியா வரவிருந்தார். இதற்கிடையில் வங்கதேச அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அந்நாட்டுக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் முன் எப்போதையும் விட தற்போது வலுவாக இருப்பதாகவும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மத ரீதியாக நசுக்கப்பட்டதாக குடியுரிமை மசோதாவில் உள்ள தகவல் தற்போது அங்குள்ள ஆட்சியை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது அல்ல என்றும் ரவீ்ஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை மசோதாவை கண்டிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதலில் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரை பாதுகாக்கட்டும் என்றும் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

