பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்

பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்
பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா சிகிச்சைக்கான எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ சான்றளிக்கவோ இல்லை என உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இந்த மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் கூறியது.

இந்நிலையில் தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு அந்த மருந்து மேம்படுத்தப்பட்டு 'கொரோனில் கிட்' என்ற பெயரில் டில்லியில் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த விழாவில் பதஞ்சலி நிறுவன அதிபர் பாபா ராம் தேவ், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த இயற்கை மருந்து குறித்து பாபா ராம்தேவ் உரையாற்றினார்.

இந்த கொரோனில் மருந்து கொரோனா தொற்று உள்ளவர்களை 3 முதல் 7 நாட்களில் 100% குணப்படுத்தும் எனவும் இதற்கு உலக சுகாதார மையம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாபா ராம்தேவ்  குறிப்பிட்டார். ஆனால் இந்த கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார மையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார மைய அமைப்பின் மத்திய மருந்துக் கட்டுப்பாடு பிரிவு கூறுகையில், ”எங்களுக்கு ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து இது மருந்துப் பொருள் என உறுதி அளிக்கப்படும் சிபிபி மட்டும் கிடைத்துள்ளது. அந்த சிபிபியில் கொரோனாவின் வழக்கமான மருந்துகளுடன் கூடுதலாக இதையும் நோயாளிகளுக்கு அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ சான்றளிக்கவோ இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

எனவே இந்த கொரோனில் மருந்தை தனியாக அளிப்பதால் கொரோனா குணமடையும் என்பதற்கு எவ்வித ஒப்புதலோ அல்லது சான்றிதழோ உலக சுகாதார மையம் அளிக்கவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மேலும் ஆயுஷ் அமைச்சகமும் இதை கொரோனா மருந்துகளுடன் கூட்டு மருந்தாக அளிக்க மட்டுமே பரிந்துரை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com