சிறப்பு அந்தஸ்து ரத்தாகி ஓர் ஆண்டு நிறைவு:  எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர் ?

சிறப்பு அந்தஸ்து ரத்தாகி ஓர் ஆண்டு நிறைவு: எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர் ?

சிறப்பு அந்தஸ்து ரத்தாகி ஓர் ஆண்டு நிறைவு: எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர் ?
Published on

 ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அந்த மண்ணில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டார்.  

அந்த முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு (ஆகஸ்ட் 5, 2019) ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்க்கையும் வேலைவாய்ப்பும் எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை டெக்கான் ஹெரால்டு வெளியிட்டுள்ளது. அதில் இருந்து சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.  

ஜம்மு காஷ்மீரில் தொடர் ஊரடங்குகள்,  வன்முறைகள், குறைவான இணையவசதிகள் உள்ளிட்ட பல காரணங்களால் பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந்துள்ளது. காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019 ஆம் ஆண்டு முதல் 4.56 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

பொருளாதாரத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தொழிற்சாலைகள் கட்டுவதற்காக மதிப்பிடப்பட்டுள்ளன. இதெல்லாம் சிறப்பு அந்தஸ்து ரத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் என அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளூர் இளைஞர்கள் வாழ்க்கையிலும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆண்டில் மட்டும் 139  இளைஞர்கள் தீவிரவாதக் குழுக்களில் இணைந்துள்ளதாக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 90 பேர் தீவிரவாதக் குழுக்களில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

ஜனவரி முதல் ஜூன் வரையில் போர்நிறுத்தக் காலத்தில் 2,300 வன்முறைச் சம்பவங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 1,321 முறை விதிமூறல்கள் நடந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஈடுபட்ட விதிமீறல்களின் எண்ணிக்கை 3.168 என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2019 – 2020 ஆண்டுகளில் முதல் ஏழு மாதங்களில் 29 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 36 பாதுகாப்புப் படை வீரர்களும், அதேபோல கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 77 வீரர்களும்  உயிரிழந்துள்ளனர். 

வேலைவாய்ப்பில் மிகப்பெரிய இழப்புகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் சந்தித்துள்ளனர். பொது வணிகத்துறையில் 1.5 லட்சம் பேரும், சுற்றுலாத்துறையில் 74 ஆயிரத்து 50 ஆயிரம் பேரும், கைவினைத்தொழிலில் 70 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்புகளை இழந்துத்  தவிக்கின்றனர். தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, விவசாயத்தில் 12 ஆயிரம் பேர் வேலைகளை இழந்துள்ளனர்.

போக்குவரத்து மற்றும் கட்டுமானத்தொழில்களில் முறையே 60 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் என்றாலே காஷ்மீர்தான். அதில் ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு மதிப்பு. மொத்த உள்நாட்டு உற்பத்தில் அதன் சதவீதம் 8 ஆக இருக்கிறது.

ஆப்பிள் விவசாயத்தில் 7 லட்சம் பேர் ஈடுபட்டுவருகின்றனர். குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்தால் 35 லட்சம் பேர் அந்தப் பணிகளைச் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அது காஷ்மீரின் மொத்த  மக்கள்தொகையில் 50 சதவீதமாகும். சுற்றுலாத்துறை சொல்லமுடியாத அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.   

இப்படி பல அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்களுடன் விரிவான கட்டுரை ஒன்றை டெக்கான் ஹெரால்டு வெளியிட்டுள்ளது.        

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com