ராமர் கோயில் பூமி பூஜை: அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு !

ராமர் கோயில் பூமி பூஜை: அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு !
ராமர் கோயில் பூமி பூஜை: அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு !

ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர்கள் காணொலி காட்சி மூலமாக விழாவில் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பல்லாண்டு கால சட்டப் போராட்டங்களுக்கு பின்னர், உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு, கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பில் மற்றொரு முக்கிய அம்சமாக, அயோத்தியில் முக்கிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ளவும் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் பிரமாண்டமாக அமையப்போகிற ராமர் கோயிலுக்கு பூமி பூஜை, வருகிற 5 ஆம் தேதி கோலாகலமாக நடக்கிறது.

ஆனால் இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நேரில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு யாத்திரைகள் கூட்டங்கள் என முயற்சிகளை எடுத்தவர் அத்வானி. அதேபோல மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்கான முன்னெடுப்புகளை தீவிரமாக எடுத்தவர். ஆனால் இருவருக்கும் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்படும் என்றும் கொரோனா காலமாக இருப்பதால் வயோதிகம் காரணமாக பூமி பூஜை நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் பார்க்கவும் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com