ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து - அதிமுக ஆதரவு
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் அமித்ஷா அறிவித்தார். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அரசியல் சாசன பிரதிகளை கிழிக்க முயற்சித்ததாக பிடிபி கட்சி எம்பிக்களான மிர் பயாஷ் மற்றும் நஸிர் அகமது இருவரையும் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்ற அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இந்நிலையில், ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன், ஜெயலலிதா இறையாண்மைக்கு முன்னுரிமை அளித்ததால் அதிமுகவும் ஆதரவு அளிக்கிறது எனத் தெரிவித்தார். மேலும் ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிற்கு பிஜூ ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்துள்ளது.