என்எஸ்இ பட்டியலில் சேர்கிறது அதானி குழும பங்குகள் - கவலையில் முதலீட்டாளர்கள்!

என்எஸ்இ பட்டியலில் சேர்கிறது அதானி குழும பங்குகள் - கவலையில் முதலீட்டாளர்கள்!
என்எஸ்இ பட்டியலில் சேர்கிறது அதானி குழும பங்குகள் - கவலையில் முதலீட்டாளர்கள்!

அதானி குழுமத்தின் பங்குகள் நாள்தோறும் சரிந்துவரும் நிலையில், என்எஸ்இ அமைப்பில் அதானி குழுமத்தின் பங்குகளை சேர்க்கும் முடிவுக்கு முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ரிசாச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

இதனைத் தொடா்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன. அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின. எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. 

ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

பங்கு முறைகேடு மற்றும் கணக்கு மோசடி குற்றச்சாட்டு காரணமாக அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் குறியீட்டு நிறுவனம் அதானி நிறுவனத்தை தனது நிலைகுறியீட்டு பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. ஆனால் சர்வதேச அளவிலான பங்குச் சந்தையாக இருக்கும் தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) இன்னும் அதானி நிறுவனங்களின் குறியீடுகளை மறுமதிப்பீடு செய்யவில்லை. மாறாக தேசியப் பங்குச் சந்தையில் 14 நிறுவனங்களுடன், அதானி குழுமத்தின் 5 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி என்எஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் “தேசிய பங்குச் சந்தையின் பங்குகளுக்கான குறியீட்டு பராமரிப்பு துணைக் குழு எடுத்த முடிவின்படி 14 பங்குகளை வரும் மார்ச் 31ம் தேதி முதல் மாற்ற உள்ளது. இது குறிப்பிட்டகால இடைவெளியில் செய்யப்படும் நடவடிக்கை. இதில் அதானி வில்மர், அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் ஆகியவை சேர்க்கப்பட உள்ளன” எனத் தெரிவித்தது. இதுதவிர வேறு 10 நிறுவனங்களும் சேர்க்கப்பட உள்ளன.

நாளுக்கு நாள் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் சரிந்துவரும் நிலையில், என்எஸ்இ அமைப்பில் அதானி குழுமத்தின் பங்குகளை சேர்க்கும் முடிவுக்கு முதலீட்டாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இது முதலீட்டாளர்களின் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் பாதுகாப்பாக இருக்காது என்று முதலீட்டாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். தேசிய பங்குச் சந்தை வாரியம் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பாளர் (செபி) இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் சேமிப்பு இதில் அடங்கி இருப்பதால், இதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து இந்து ஆங்கில நாளிதழுக்கு என்எஸ்இ அளித்த விளக்கத்தில், “நிப்டி பங்குகளின் மறுசீரமைப்பு என்பது, பங்குகளை எவ்வாறு முதலீட்டாளர்கள் முந்தைய காலத்தில் வாங்கியுள்ளார்கள் என்பதை பொருத்து அமையும். ஆண்டுக்கு இருமுறை எடுக்கப்படும் புள்ளி விவரங்கள் அடிப்படைியில் நிப்டியில் நிறுவனங்கள் பட்டியலிடப்படும். அந்த வகையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் எந்த நிறுவனங்களின் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதோ அந்தப் பங்குகள் இடம்பெறும். அந்த வகையில் அதானி குழுமத்தின் பங்குகள் இடம்பெற்றுள்ளன. புதிய பங்குகள் மாற்றம் வரும் மார்ச் 31ஆம் தேதி  முதல் நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com