கோவிஷீல்டு செலுத்தியோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் - விளக்கம் கொடுத்த சீரம்

கோவிஷீல்டு செலுத்தியோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் - விளக்கம் கொடுத்த சீரம்
கோவிஷீல்டு செலுத்தியோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் - விளக்கம் கொடுத்த சீரம்

சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திய இந்தியர்களும், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா உறுதியளித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியானது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் இணை தயாரிப்பாகும். இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் புனே ஆலையில் தயாரித்து வருகிறது. இதுநாள் வரை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவை எதிர்க்க தற்போது இருக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசி என கூறப்பட்டு வரும் நிலையில், உலகளவில் அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன், கோவிஷீல்டு (இங்கிலாந்தில் வேக்ஸேவ்ரியா), இந்தியாவின் கோவேக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, சீனாவின் இரண்டு தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்களை மட்டுமே வரவேற்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் தங்கள் நாடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள 'கிரீன் பாஸ்' என்ற நடைமுறையை செயல்படுத்த இருக்கிறது. இந்த நடைமுறையின்படி, கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் இந்த 'கிரீன் பாஸ்' சான்றிதழ் பெற்று எளிதாக பயணம் செய்யலாம். கிரீன் பாஸ் உடன் ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ், பிரான்ஸில் இருந்து இத்தாலி என பயணமாகலாம்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 'கிரீன் பாஸ்' அங்கீகாரத்தை கொடுக்கவில்லை. மொத்தமாக ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவ்ரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே இதுவரை அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டால் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திய இந்தியர்கள், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் மற்ற நாடுகளுக்கு பயணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துகொண்ட இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதில் சிக்கல் இருப்பதை அறிகிறேன். இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஓர் உறுதியளிக்கிறேன். இந்த விஷயத்தை உயர் மட்ட அளவில் எடுத்துச் செல்வேன். இது என் கடமை. விரைவில் இந்த விவகாரம் தீர்க்கப்படும் என நம்புகிறேன். சம்பந்தப்பட்ட நாடுகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்வேன்" என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com