தொடர் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் இதுதான்!

தொடர் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் இதுதான்!
தொடர் சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் இதுதான்!

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று தொடங்கிய தேசியப் பங்குச் சந்தையில் 15 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகச் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அதானியின் பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி கீழிறிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று தொடங்கிய தேசிய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் விலை விலை ஏற்றத்தைச் சந்தித்தன.
அதானி குழுமத்தின் பெரும்பாலான பங்குகள் விலை மெல்ல மெல்ல ஏறி வருகிறது.

அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1,372 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய விலையைவிட 15 சதவிகிதம் அதிகமாகும். நேற்றைய தேதியில் தேசிய பங்கு சந்தையில் அதானி எண்டர்பிரைஸ் பங்கு ஒன்றின் விலை 1,118 ரூபாய் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 8 நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், ஆரம்பத்தில் 7 சதவீதத்துக்கும் மேல் சரிந்து பின்னர் விலையேறியது. மேலும் அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மர், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி போன்றவையும் ஏற்றம் கண்டன.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன் அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 3 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்த நிலையில், அந்த பங்கு விலை தற்போது பெருமளவு குறைந்துவிட்டது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அதானி எண்டர்பிரைஸின் ஒரு பங்கு விலை 1,017 ரூபாய் என்று மிகக் குறைந்தது. அதன் பின்னர் அதானி குழும பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியிலேயே இருந்தன. நேற்று சற்று உயர்வு கண்ட நிலையில், இன்று 15 சதவிகிதம் ஏற்றம் கண்டிருக்கிறது. அதானி குழுமம் வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தியதும், எஃப்.பி.ஓ. பங்குகளைத் திரும்பப் பெற்றதுமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்திற்குள் அதானி குழுமம் சுமார் ரூ.12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதானி குழுமத்தின் தொடர் வீழ்ச்சியால், கெளதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 32வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் 37.7 பில்லியன் சொத்துக்களுடன் 32வது இடத்தில் இருப்பதாக ப்ளும்பெர்க் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தப் பட்டியலில் ட்விட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் பட்டியலில் 2வது இடத்தைப் பிடிப்பதற்கு, எலான் மஸ்க்கிற்கும், அதானிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்ட நிலையில்தான், ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழும பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதுபோல், எலான் பங்கும் கடந்த சில மாதங்களில் சரிவைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com