ரூ.400 கோடிக்கு ஏர் வொர்க்ஸ் நிறுவனத்தை வாங்கும் அதானி குழுமம்!
இந்தியாவில் அதிக அளவில் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்று கௌதம் அதானி. சமீபத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் சூரிய மின்சார விநியோக ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதானி குழுமம் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் வைத்தன. ஆனால், சில அறிக்கைகளுடன் இந்த விவகாரத்தை முடித்துக் கொண்டு அதானி குழுமம் தனது வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான பராமரிப்பு நிறுவனமான 'ஏர் வொர்க்ஸ் (Air Works)' நிறுவனத்தை ரூ.400 கோடிக்கு வாங்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதானி குழும அறிக்கையில், “அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் & டெக்னாலஜிஸ் லிமிடெட் (ADSTL) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை MRO நிறுவனமான ஏர் ஒர்க்ஸில் 85.8 சதவீத பங்குகளை வாங்குவதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
தற்போது இந்த நிறுவனத்தை அதானி குழுமம் வாங்கப்போவதன் மூலமாக அக்குழுமம், விமானத் துறையிலும் முக்கியப் பங்கு வகிக்க இருக்கிறது. ஏர் வொர்க்ஸ் நிறுவனமானது, இந்தியா முழுவதும் உள்ள 35 நகரங்களில் இயங்குகிறது. அதில் கிட்டத்தட்ட 1,300 பேர் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனம், விமானப் போக்குவரத்து பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.