திடீரென 25% உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் என்ன தெரியுமா? குஷியில் முதலீட்டாளர்கள்!

திடீரென 25% உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் என்ன தெரியுமா? குஷியில் முதலீட்டாளர்கள்!
திடீரென 25% உயர்ந்த அதானி குழும பங்குகள்.. காரணம் என்ன தெரியுமா? குஷியில் முதலீட்டாளர்கள்!

அதானி குழும பங்குகள், இன்று திடீரென 25% உயர்ந்திருப்பதைக் கண்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையடைந்துள்ளனர். 

அதானி குழும பங்குகள் சரிவு

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், ஆசியாவிலேயே மிகப் பிரபலமான தொழில் நிறுவனமான அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், உலக அளவில், அதானி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாய் வெடித்து வருகிறது. இந்தியாவில், நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டு வருவதுடன், அதானி குறித்து பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

திடீரென 25% விலை உயர்ந்த பங்குகள்

இந்த நிலையில், அதானி குழும பங்குகள் இன்று 25 சதவிகிதம் வரையில் ஏற்றம் கண்டுள்ளன. இது அதானி குழும முதலீட்டாளர்களுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த வேளையில், இன்று 25 சதவீதம் வரையில் ஏற்றம் கண்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 25% அதிகரித்து, 1965.50 ரூபாயாகவும், இதே போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 9.64% ஏற்றம் கண்டு, 598.70 ரூபாயாகவும், இதே அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலையானது அப்பர் சர்க்யூட் ஆகி, 399.40 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது அப்பர் சர்க்யூட் ஆகி 1324.45 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது.

திடீர் விலை உயர்வுக்குக் காரணம்

”அதானி வாங்கிய கடன்களில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதாகத் தெரிவித்திருந்ததே, இந்த விலையேற்றத்துக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு புத்துணர்வைத் தருவதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது” என சந்தை வர்ணனையாளர் ஸ்ரீநாத் ஸ்ரீதரன் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அதானி குழும பத்திரங்கள் தகுதியுடையவைதான் என JP Morgan நிறுவனம் கூறியதும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் அதானி குழும பங்குகள் இன்று ஏற்றத்தினை கண்டுள்ளன. ”தற்போதைய குறியீட்டு விதிகளின்படி, அதானி குழும நிறுவனங்கள் CEMBI, JACI மற்றும் JESG குறியீடுகளில் சேர்ப்பதற்கு தகுதியுடையதாகவே இருக்கும்” என JP Morgan நிறுவனம் நேற்று கூறியிருந்தது.

JP Morgan வெளியிட்ட அறிக்கை

மேலும் அது தன்னுடைய அறிக்கையில், “அதானி குழுமம் குறித்த பொதுவில் கிடைக்கும் தகவல் மற்றும் பத்திரங்களின் பணப்புழக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதானி குழுமத்தின் முக்கிய வணிகங்களில் துறைமுகங்கள், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடங்கும், CEMBI மற்றும் JACI குறியீடுகளில் அதானி குழுமம் மொத்தம் 7.7 பில்லியன் டாலரைக் கொண்டுள்ளது” என JP Morgan நிறுவனம் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் சந்தை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனை, கார்ப்பரேட் எமர்ஜிங் மார்க்கெட் பாண்ட் இன்டெக்ஸ் சீரிஸும் (CEMBI), ஆசிய நிலையான-விகித டாலர் பத்திரச் சந்தையின் மொத்த வருவாய் செயல்திறனை, JP Morgan ஆசியா கிரெடிட் இண்டெக்ஸும் (JACI) கண்காணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

இந்த நிலையில், இன்று 25% உயர்ந்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகள் மூலம், இந்த வாரம் அவருடைய நிறுவனங்களின் வருவாயையும் முதலீட்டாளர்கள் உற்றுநோக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அதன் FPO விற்பனையைத் திரும்பப் பெறுவதாகவும், ஏற்கெனவே அந்தப் பங்குகளை வாங்குவதற்காகச் செலுத்தப்பட்ட ரூ. 20,000 கோடியைத் திரும்பப் பெறுவதாகவும் அதானி குழுமம் அறிவித்திருந்தது. தவிர, 2024க்குள் கட்டவேண்டிய கடனில் ஒரு பகுதியான 1,114 மில்லியன் அமெரிக்க டாலர்களை முன்கூட்டியே செலுத்தப்படும் எனவும் அதானி குழுமம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதானி குறித்த முழு விவரங்களையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com