2 நாட்களில் ஒரு லட்சம் கோடி சரிவு.. உலக பணக்காரர்கள் பட்டியலில் 25வது இடம் சென்ற அதானி!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் கௌதம் அதானி. உலக பணக்காரர்கள் பட்டியலில் 22வது இடத்தில் நீடித்தவர்.
இந்நிலையில் இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டு அதானி மீது பிடிவாரண்டும் விடுக்கப்பட்டுள்ளது.
பணக்கார பட்டியலிலும் சரிந்த அதானி..
இந்நிலையில், அமெரிக்காவில் அவர் மீது தொடரப்பட்ட வழக்தைத் தொடர்ந்து, அதானி குழுமத்தில் உள்ள நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததோடு, கௌதம் அதானியின் சொத்துமதிப்பும் சரிந்துள்ளது.
போர்ப்ஸ் நிகழ்நேர பணக்காரர்கள் பட்டியலின்படி, கௌதம் அதானி 22ஆவது இடத்தில் இருந்து 25ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின் சொத்துமதிப்பும் 5 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.