பெங்களூரில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நடிகையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றுக்கு ஆட்டோவில் வந்தார் நடிகை ஜெயம்மா. இவர் கன்னடத்தில் சுதீப், உபேந்திரா உட்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். இவரும் ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜூலு என்பவரும் கடைக்குள் வந்து சாமான்கள் வாங்கிவிட்டு, கல்லாவில் பணத்தைக் கொடுத்தனர். புதிய 2 ஆயிரம் ரூபாய்களான அதை கையில் பிடித்ததும் வித்தியாசமாக தெரிந்ததால், கடைக்காரர் ஜெயம்மாவிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார் ஜெயம்மா. பிறகு கடைக்காரரிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு சாமான்களை அங்கேயே விட்டு வெளியே சென்றார். பின்னர் வேறொரு கடையில் இதே போல பொருட்கள் வாங்கிவிட்டு பணத்தை மாற்றினார். அங்கும் சந்தேகம் எழுந்ததால் கேள்விகள் கேட்டனர். இதையடுத்து அவர் வேகவேகமாக ஓடி, ஆட்டோவில் ஏறினார். அவரது வேகத்தில் சந்தேகப்பட்ட அங்கிருந்தவர்கள், அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அவரிடம் இந்த பணத்தைக் கொடுத்தாக ஜெயம்மா சொன்னார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.