மைசூரு சாண்டல் சோப் | ”கன்னட நடிகை கிடைக்கலையா?” விளம்பர தூதராக நடிகை தமன்னா.. கிளம்பிய எதிர்ப்பு!
கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்படும் மைசூரு சாண்டல் சோப் நாடு முழுவதும் மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், அந்தச் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. இதற்காக ரூபாய் 6.20 கோடி கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரே விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன. மேலும் சமூக வலைதளங்களில் கன்னடர்கள் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுபற்றி கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், “மைசூரு சாண்டல் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். நடிகை தமன்னாவை நியமிப்பதற்கு முன்பு நாங்கள் கன்னடரான நடிகை தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா ஆகியோரைச் சந்தித்து இதுபற்றி பேசினோம். மேலும் சில நடிகைகளிடம் பேசினோம்.
தீபிகா படுகோனே வேறு பிரசார நிகழ்வுகளில் தீவிரமாக உள்ளார். மற்ற நடிகைகள் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளில் விளம்பர தூதர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். அதனால் சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் விளம்பர தூதராக நியமித்துள்ளோம்” என்றார்.