சமீப காலமாக சினிமா நடிகைகள், நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து வரும் சூழல் அனைத்து இடங்களிலும் இருக்கிறது. மிகுந்த திறமையானவர்களாக தங்களை வளர்த்துக் கொள்ள மிகுந்த மெனக்கெடுதலையும் செய்கின்றனர். ஆனால், இதெல்லாம் சேர்ந்து மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும் போது உயிரை மாய்த்துக் கொண்டு விடுகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் பண்டேல் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான மௌமிதா சகா. வெள்ளித்திரை நடிகையாக பல்வேறு தொடர்களில் நடித்து வருபவர். அஷோக் நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நேற்று குட்நைட் சொல்லிட்டு தூங்க போன மௌமிதாவா இப்போ பிணமாக இருக்கிறாள் என மனமுடைகிறார் வீட்டு ஓனர்.
மௌமிதாவின் இந்தத் தற்கொலைக்கு முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிச்சியடைய வைக்கிறது.
மௌமிதாவின் அறையில் இருந்து போலீசார் ஒரு தற்கொலை கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில், இந்த உலகை விட்டு செல்கிறேன், எப்போதும் போல் தனியாகவே செல்கிறேன் என எழுதியிருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தான் அதிக மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்ததாகவும், வேறு வழியில்லாமல் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், தற்கொலை கடிதத்தை மட்டும் வைத்து இது தற்கொலை எனக் கூற முடியாது, அவரது தொலைபேசி அழைப்புகள், ஃபேஸ்புக் பதிவுகள் வைத்து விசாரணை நடக்கிறது; இப்போதைக்கு மரணத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை என்றனர்.
மௌமிதாவின் நண்பர்கள் மற்றும் அவரை தெரிந்த நடிகர்கள் தெரிவிக்கையில், எப்படியாவது பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பது மௌமிதாவின் விருப்பமாக இருந்ததாகவும், ஆனால் பெரிய அளவில் எந்த நாடகமோ, விளம்பரமோ மௌமிதாவுக்கு கை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் எனவும் கூறினர்.