“ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராவது உறுதி”- ஜெயசுதா
பிரபல தெலுங்கு நடிகையான ஜெயசுதா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பிரபல தெலுங்கு நடிகையும் செகந்திராபாத் முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயசுதா நேற்று ஹைதராபாதில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயசுதா ‘“ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபொழுது என்னை திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு கொண்டு வந்தார். செகந்திராபாத் தொகுதியில் நான் போட்டியிட வேண்டுமென அவர் தெரிவித்தபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி என்னை அந்த தொகுதியில் போட்டியிட வைத்தார். பின்னர் நான் தேர்தலில் இரண்டு முறை வெற்றி பெற்றேன். அவர் உயிரிழப்புக்கு பிறகு அரசியல் மாற்றத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்றேன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வர வேண்டுமா என்று ஆலோசித்தபோது ராஜசேகர ரெட்டியின் வாரிசான ஜெகன்மோகன் ரெட்டியை பலப்படுத்துவதற்காக தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளேன். ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தால் ஆந்திராவில் எங்கு வேண்டுமென்றாலும் போட்டியிட தயாராக உள்ளேன். அரசியலுக்கு நான் முதல் முதலில் வந்தபோது ராஜசேகர ரெட்டி சொன்னவற்றை நான் செய்து வந்தேன். அது போன்று ஜெகன்மோகன் ரெட்டி என்ன சொல்கிறாரோ அதன்படி செயல்படுவேன். நடைபெற உள்ள ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராவது உறுதி. அவர் வெற்றி பெறுவதற்காக என்னால் முடிந்த முயற்சியையும் பிரச்சாரமும் மேற்கொள்வேன்” என அவர் தெரிவித்தார்.