ஆந்திரா: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் கட்டியபோது நேர்ந்த விபரீதம்; ரசிகர்கள் இருவர் பலி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர், திரைப் பயணம் தவிர்த்து பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தன்னுடைய 48வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். தவிர, அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி ஆந்திர மாநிலத்தின் மோபுரிவாரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பாபட்லா மாவட்டம் ஜே.பங்களூரைச் சேர்ந்த போளூரி சாய் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சனிக்கிழமை இரவு (ஜூலை 22) நரசாராவ்பேட்டையில் ஃப்ளெக்ஸ் பேனர்களைக் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஃப்ளெக்ஸ் பேனர் ப்ரேமில் இருந்த இரும்புக் கம்பி அங்குள்ள மின்சார கம்பியில் மோதியதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் நரசராவ்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மாணவர்கள் இருவரும் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நரசராவ்பேட்டை ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட ரசிகர்களின் மரணம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.