
கன்னடத்தின் பிரபல நடிகை சுதாராணியின் சகோதரர் மகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது என கூறி தனியார் மருத்துவமனையொன்று அனுமதி தர மறுத்துள்ளது.
நடிகை சுதாராணி தமிழில் ஷாலி என்ற பெயரில் சரத்குமாரின் தங்கையாக "வசந்தகால பறவை" படத்தில் நாயகியாக நடித்தவர். கன்னடத்தில் குணச்சித்திர நடிகையாக இப்போது நடித்து வருகிறார். இவர் தன்னுடைய சகோதரர் மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் பெங்களூருவின் சேஷாத்ரிபுரத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் புதிய நோயாளிகளை உள்ளே அனுமதிக்க முடியாது என வாசலிலேயே நிறுத்தப்பட்டு நோயாளிக்கு சிகிச்சையும் மறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெங்களூர் நகர காவல் ஆணையருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் சுதாராணி. இதனையடுத்து காவல்துறையிலிருந்து மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுத்த பின்பே நோயாளியை சிகி்சசைக்கு அனுமதித்துள்ளனர். இதையடுத்து சுதாராணிக்கு மட்டுமல்ல, எந்த ஒரு சாமான்ய மனிதனையும் மருத்துவமனைகள் இவ்வாறு மோசமாக நடத்தக்கூடாது என்று கூறியதோடு, இனி இதுபோல நிகழ்வுகள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில சுகாதரத்துறை அமைச்சர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.