“கட்சியை விட கொள்கையே முக்கியம்” - அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் சோனு சூட்!
இந்திய சினிமா நடிகர் சோனு சூட் தமிழ் உட்பட பன்மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர். வறியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருபவர். மாணவர்களுக்கான கல்வி தொடங்கி விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலருக்கும் உதவியுள்ளார். இத்தகைய சூழலில் பொது வாழ்க்கையான அரசியல் என்ட்ரி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி வாக்கில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்கும் எந்தவொரு தளத்திலும் பணியாற்ற நான் தயார். அது அரசியலாகவும் இருக்கலாம். அது இல்லாமல் கூட இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சகோதரி மாளவிகா சூட், எந்த அரசியல் கட்சியில் சேர உள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லியுள்ளார். “கட்சியை விட கொள்கை தான் முக்கியம். எனது சகோதரி மக்களுக்காகவும், சமூதயத்திற்காகவும் சேவை செய்திடதான் அரசியலுக்கு வருகிறார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என இரண்டு கட்சிகளும் நல்ல கட்சிகள் தான்” என தெரிவித்துள்ளார். அவரது சகோதரி எதிர்வரும் பஞ்சாப் மாநில தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையை ‘சோதனை காலம்’ என தெரிவித்துள்ளார். “நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன். அவர்களுக்கு அவர்களது உரிமை கொடுக்கப்பட வேண்டும். அவர்களால் தான் நாம் உணவு சாப்பிடுகிறோம்” என தெரிவித்துள்ளார் அவர்.
அண்மையில் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்திருந்தார் சோனு சூட்.