திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் விபத்தில் உயிரிழப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்து வீடு திரும்பிய குடும்பம் விபத்தில் சிக்கியது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் உயுரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (42). இவர் தன் குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன் தினம் திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்ததை அடுத்து நேற்று மாலை காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று பிற்பகல் பிரகாசம் மாவட்டத்தின் கொல்லப்பள்ளி கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பாண்டுரங்கா (42), நரசிம்ம ராவ் (40), டி.வி.ஆர்.எஸ்.ரெட்டி (44), ஷ்யாம் (10 ) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அனுராதா (35) மற்றும் பானுப்பிரியா (15) ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடினர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதிக்கு கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தார் போலீசார் காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.