மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விலங்குகளைக் காக்க கூண்டுகளில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளைக் கூட வாட்டி வதைக்கும். இந்த வெப்பத்திலிருந்து விலங்குகளை பாதுகாக்க மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வன விலங்கு பூங்கா ஒன்றில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
வன விலங்குகள் பூங்காவில் இருக்கும் விலங்குகளை வெயில் மற்றும் வறட்சியில் இருந்து பாதுகாக்க பூங்கா நிர்வாகத்தினர் இதுபோன்ற பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் போபால் வன விலங்குகள் பூங்காவில் விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. விலங்குகளை கோடை வெப்பத்திலிருந்து தணிக்கும் விதமாக அவைகள் குளிக்க ஆங்காங்கே தற்காலிக தண்ணீர் தொட்டிகளும் வனச்சரணாலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற சிறப்பு ஏற்பாடுகளின் மூலம் வெப்பத்தின் தாக்கத்தால் விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை குறையும் என வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.