அண்ணா பல்கலைக விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக டெல்லியில் ABVP போராட்டம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் ABVP என அழைக்கப்படும் அகில இந்திய மாணவர்கள் சங்கம் இன்று போராட்டம் நடத்தியது.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட வலது சாரி அமைப்பான ABVP திட்டமிட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
டெல்லி காவல்துறை தமிழ்நாடு இல்லம் செல்லும் சாலைகள் அனைத்தையும் அடைத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தமிழ்நாடு அரசு வெட்கம் கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ABVP மாணவர்கள் முழக்கமிட்டனர். திமுகவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் அவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டுக்கு சென்று போராட்டம் நடத்த நாங்கள் தயார் என ABVP டெல்லி மாநில செயலாளர் ஹர்ஷ் அட்ரி தெரிவித்தார். புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடிய ABVP நிர்வாகிகளை தமிழ்நாடு காவல்துறை இரவில் கைது செய்தது என குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்கள் கசிந்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் கட்டிய நிலையில், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் டெல்லி காவல்துறைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் செல்லும் சாலை இரண்டு பக்கமும் தடுப்புகளை அமைத்து காவல்துறையால் அடைக்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட வழியில்லாத நிலையில், ABVP ஆதரவாளர்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.