காண்போரைக் கவரும் அப்துல்கலாம் அருங்காட்சியகம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே புனலால் பகுதியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. கலாமின் அரிய புகைப்படங்கள், அவர் தலைமையில் திட்டமிட்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் வடிவங்கள், அவர் பயன்படுத்தியிருந்த பொருட்கள், அவர் எழுதிய வசனங்கள் என அவரைக் குறித்து அனைத்து தரப்பு மக்களுக்கும் விளங்கும் வகையில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த மலையோர கிராமத்தில் அமைப்பட்டுள்ள அருங்காட்சியகம் அந்த கிராம மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறும்போது, "தென் இந்தியாவிலேயே முதல் முறையாக எங்களது கிராமத்தில் அப்துல்கலாமுக்கு அருங்காட்சியகம் துவங்கியுள்ளதால் அவரை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதற்கு இது உதவுகிறது. அவரது வாழ்க்கை குறித்து புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கிறேன். இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டிருப்பதால் அவரது வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் தோற்றமளிக்கிறது" என்றார்.
மிகச் சிறிய கிராமத்திலிருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல் கலாம் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து, அவரைப் போலவே வளர இந்த அருங்காட்சியகம் உதவும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

