பாஜகவின் கோட்டையான ‘குஜராத்’-ல் கொடியை நாட்டும் ஆம் ஆத்மி.. இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி!
குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் குஜராத் மாநிலம் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இத்தாலியா கோபால், 75,942 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட 17,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 2022 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த தொகுதியை ஆம் ஆத்மியே கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் கோட்டை எனப்படும் குஜராத்தில், ஆம் ஆத்மி கோலோச்சி வருவது பாஜகவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
விசாவதார் தொகுதியில் கடைசியாக பாஜக, 2017இல் வென்றிருந்தது. எனினும், குஜராத்தில் உள்ள காடி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், குஜராத், கோவா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலிலும் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியே மீண்டும் வெற்றிபெற்று இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மறுபுறம் கேரளாவின் நிலம்பூர் தொகுதியை காங்கிரஸும், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.