காங். வாக்குகளை கவரும் ஆம் ஆத்மி? குஜராத், இமாச்சலில் மீண்டும் பாஜக! கருத்துகணிப்பு முடிவு

காங். வாக்குகளை கவரும் ஆம் ஆத்மி? குஜராத், இமாச்சலில் மீண்டும் பாஜக! கருத்துகணிப்பு முடிவு
காங். வாக்குகளை கவரும் ஆம் ஆத்மி? குஜராத், இமாச்சலில் மீண்டும் பாஜக! கருத்துகணிப்பு முடிவு

ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது சக்தியாக உருவெடுத்தாலும், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என விரைவில் அறிவிக்கப்படவுள்ள சட்டசபை தேர்தல்கள் தொடர்பான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாத இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் மீண்டும் பாஜக?

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில், பாஜக 135 முதல் 143 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக "ஏபிபி-சி ஓட்டர்" கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என அந்த கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இந்த கருத்துகணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாக்கு வங்கியை பெருக்கும் ஆம் ஆத்மி?

ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு 17.4 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 ஆம் வருடம் 49.1 சதவீதம் என பதிவான பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி தற்போது 46.8% ஆக குறையும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 41.4 சதவீதத்திலிருந்து 32.3%அக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலிலும் மீண்டும் பாஜக?

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி 37 முதல் 48 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 21 முதல் 29 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரசுக்கு வாக்கு சதவிகிதம் குறையும் எனவும் ஆம் ஆத்மி கட்சிக்கு 9.5% வாக்குகள் கிட்டும் எனவும் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் பிற கட்சிகள் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான 3வது சக்தியாகிறதா ஆம் ஆத்மி?

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் இதுவரை பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி என இருந்த நிலையில், மூன்றாவது சக்தியாக இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்குமே வாக்கு சதவிகிதம் குறையும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளையே அதிகப்படியாக ஆம் ஆத்மி கட்சி கவர்ந்து செல்லும் என்பதால், இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங். வாக்குகளை கபளிகரம் செய்யப் போகிறதா ஆம் ஆத்மி?

குறிப்பாக குஜராத் மாநிலத்தில் 2017 சட்டமன்ற தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி கிடைத்த நிலையில், பாஜக 2022 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 35 முதல் 40 கூடுதல் தொகுதிகளை கைப்பற்றும் என கணிப்பில் தெரியவந்துள்ளது. வாக்கு சதவீதம் குறைந்தாலும், பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கு காரணம் ஆம் ஆத்மி கட்சி அதிகப்படியாக காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தன்பால் ஈர்ப்பதுதான் என கருதப்படுகிறது.

காங். பின்னடைவுக்கு காரணம் என்ன?

அத்துடன் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அகமது படேல் காலமானது மற்றும் காங்கிரசின் மாநில தலைவராக இருந்த ஹர்த்திக் படேல் பாஜகவில் இணைந்தது ஆகியவை அந்த கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல முதலமைச்சராக பூபேந்திர படேல் நியமிக்கப்பட்டதும் பாஜகவுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் இவ்வாறு வெளியாகியுள்ள நிலையில், தேர்தலில் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும்.

- புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com