
குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி கூறியதுடன், 504 வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் இன்று அறிவித்தது.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏவும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அதிஷி , குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் நகராட்சிகள், நகராட்சி அமைப்புகள், மாவட்டம் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.
"ஆம் ஆத்மி மாநிலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் முதல் முறையாக போட்டியிடும். இதன் மூலம் கட்சி குஜராத்தின் தேர்தல் அரசியலில் பாஜகவுக்கு வலுவான மாற்றாக நுழைகிறது. பாஜகவை அதிகாரத்திலிருந்து நீக்க ஆம் ஆத்மி கட்சி செயல்படும் "என்று அதிஷி கூறினார். மேலும் “குஜராத் மக்களின் கோரிக்கையின்பேரில் ஆம் ஆத்மி மாநிலத்தில் தேர்தல் அரசியலில் நுழைகிறது, ஆனால் மிரட்டல் மற்றும் கவர்ச்சியான அரசியலுடன் பாஜக விளையாடுகிறது. பாஜகவுக்கு பயப்படாத ஒரு தலைவர் நாட்டில் இருந்தால், அது அரவிந்த் கெஜ்ரிவால்தான். மேலும் பாஜகவை பயமுறுத்தவோ, கவர்ந்திழுக்கவோ முடியாத ஒரு கட்சி இருந்தால், அது ஆம் ஆத்மி "என்று அவர் கூறினார்.