விவசாயிகளுக்கான நிதி உதவியை பெற ஆதார் கட்டாயம் - மத்திய அரசு
பட்ஜெட்டில் அறிவித்த விவசாயிகளுக்கான நிதி உதவியைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ,சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் இந்த நிதி உதவியை பெற ஆதார் அட்டை அவசியம் என அறிவித்துள்ளது. ஆனால் முதல் தவணை தொகையான இரண்டு ஆயிரம் ரூபாய் பெற ஆதார் அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வேளாண் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தில் முதல் தவணை பெற ஆதார் எண் கட்டாயமில்லை. ஆனால் முதல் தவணைக்கு ஆதாருக்கு பதிலாக ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதாவது ஓர் அடையாள அட்டையை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இரண்டாம் தவணை உதவித் தொகையைப் பெற ஆதார் கட்டாயம். இந்த திட்டத்தில் தவறுகள் நடக்காமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
நிதி உதவி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கர்க், "விவசாயிகளுக்கான முதல் தவணை உதவித் தொகையான ரூ.2 ஆயிரம் விரைவில் அவரவர்களில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.