ஆதார்: போலிகள், பிழைகள், குளறுபடிகள்... சிஏஜி-யின் அதிர வைக்கும் அறிக்கை!

ஆதார்: போலிகள், பிழைகள், குளறுபடிகள்... சிஏஜி-யின் அதிர வைக்கும் அறிக்கை!
ஆதார்: போலிகள், பிழைகள், குளறுபடிகள்... சிஏஜி-யின் அதிர வைக்கும் அறிக்கை!

குடிமக்களின் அடையாள ஆவணமான “ஆதார்” போலிகள், பிழைகள், குளறுபடிகள் நிறைந்ததாக இருக்கிறது என சிஏஜி -யிடம் இருந்து அதிர வைக்கும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

' போலியாக உருவாக்க முடியாது, தனித்தன்மையோடு இருக்கும் ' என்பது போன்ற பல்வேறு அடைமொழிகளுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆதார் எண். கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஆதார் எண் உருவாக்கப்பட்டது அன்று தொடங்கிக் கடந்த 2021 அக்டோபர் மாதம் வரையில் சுமார் 131.68 கோடி ஆதார் எண்கள் UIDAI- யால் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் முதல் மத்திய அரசு வரை நலத்திட்டங்கள் பெறுவதில் தொடங்கி புதிய அடையாள அட்டைகளைப் பெறுவது வரை அனைத்துக்கும் ஆதாரை கட்டாயமாக்கியுள்ளன. இவ்வளவு முக்கியமானதாகப் பார்க்கப்படும் ஆதாரில் நிறையக் குளறுபடிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதைப் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பு ( சிஏஜி ). கடந்த வாரம் வெளியான சிஏஜி -யின் அறிக்கையால் ஆதாரின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

' ஆதார் எண்' - குழப்பங்களின் மையப்புள்ளி

மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு 2009-ம் ஆண்டு வாக்கில் ஆதார் எண்ணை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான செயல்களின் ஆர்வம் காட்டத் தொடங்கியது. பின்னர் 2012- 2013 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பான வேலைகள் தீவிரமாக நடைபெறத் தொடங்கின. அந்த சமயத்தில் ஆதார் தேவையில்லாத ஒன்று என விமர்சனம் செய்தது இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு. " ஆதாரில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்குப் பிரதமர் பதிலளிக்கவே முடியாது. ஆதாரில் தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லை, இருப்பதெல்லாம் வெறும் அரசியல் வித்தை மட்டும்தான் " எனச் சொன்னவர் இப்போதைய பிரதமர் மோடி.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் அரசை விடவும் ஆதார் மீது பல மடங்கு ஆர்வம் காட்டியது பாஜக அரசு. அரசின் நலத்திட்டங்களை மக்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில் பெரும்பாலான தீர்ப்புகளில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்றும் தனி மனித உரிமைக்கு எதிரானது என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த தீர்ப்புகள் எதுவும் கண்டுகொள்ளப்படுவதில்லை. சமீபத்தில் கூட பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதைக் கட்டாயமாக்கியது மத்திய அரசு. ஆதார் அட்டையைப் போலியாக உருவாக்கியதாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குப் பதியப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன ?

இந்த நிலையில்தான் சிஏஜி -யின் 108 பக்க அறிக்கையில் ஆதாரில் உள்ள குறைபாடுகள், பிழைகள், பாதுகாப்பின்மை பற்றியும் அதை உடனடியாக சரி செய்தாக வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப்போதுள்ள நடைமுறைப்படி விண்ணப்பித்த தேதியிலிருந்து முந்தைய 12 மாதங்களில் 182 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் இந்தியாவில் வசித்திருந்தால் ஒருவருக்குப் புதிதாக ஆதார் வழங்கப்படுகிறது. ஆனால் அவர் இந்தியாவில் எவ்வளவு காலம் வசித்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் சரிபார்க்கப்படுவதில்லை சுயமாகச் சமர்ப்பிக்கும் படிவமே அதரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதைத் தவிர்க்கும் வகையில் சுயமாக அளிக்கப்படும் தவிர்த்து வேறு செயல்முறை அல்லது ஆவணத்தை UIDAI பரிந்துரைக்க வேண்டும் என சிஏஜி குறிப்பிட்டுள்ளது.

ஆதார் தனித்துவமானது எனவே ஒருவர் இரண்டு ஆதார் எண்களைப் பெற முடியாது என்பதற்கு மாறாக 4.7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆதார் நகல்களை (நவம்பர் 2019 வரை ) UIDAI ரத்து செய்துள்ளது. இதன் மூலம் ஒரே பயோமெட்ரிக் தரவுகளுடன் வெவ்வேறு நபர்களுக்கு ஆதார்கள் வழங்கப்பட்டது உறுதியாகிறது. நகலை நீக்குவதற்கான அமைப்பில் உள்ள குறைபாட்டை இது காட்டுகிறது. மேலும் இன்னும் தவறான ஆதார் தகவல்கள் தரவுத்தளத்தில் இருக்கின்றன.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பயோ மெட்ரிக் ஆதாரங்கள் இல்லாமல் அவர்களது பெற்றோர்களிடமிருந்து எடுக்கப்படும் ஆதாரங்களைக் கொண்டே ஆதார் எண்கள் உருவாக்கப்படுகின்றன. இது ஆதாரின் அடிப்படை விதிகளுக்குப் புறம்பானது என்பதால் குழந்தைகளுக்கு ஆதார் வழங்க வேறு முறைகளை UIDAI கையாள முயல வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் 31, 2019 வரை குழந்தைகளுக்கான ஆதாரைப் பொறுத்தவரையில் ரூ. 310 கோடியைத் தேவையற்ற தவிர்க்கக் கூடிய செலவினங்களை UIDAI செய்துள்ளதையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.


அடையாள உறுதிப்படுத்தலின்போது ஏற்படும் பிழைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான அமைப்பு UIDAI- யிடம் இல்லை. முதல் முறை பயோ மெட்ரிக் அடையாளங்கள் சரிவரப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பலர் மீண்டும் தன்னார்வலராகப் புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்கிறார்கள். அது அவர்களின் தவறில்லை என்பதால் புதுப்பிப்பு கட்டணங்களை UIDAI மறு ஆய்வு செய்ய வேண்டும்.

UIDAI-யிடம் உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் தரவுத்தளங்களில் ஒன்று இருக்கிறது. ஆனால் அவர்களிடம் தனிப்பட்ட தரவு காப்பகக் கொள்கை ( Archiving policy ) இல்லை. என்பது போன்ற பல்வேறு குளறுபடிகள் சிஏஜி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதார் போன்று ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்களைச் சேகரித்து உருவாக்கப்படும் ஒரு அடையாள அட்டைக்கு அல்லது எண்ணுக்குத் தேவைப்படும் முதல் சவாலே அவற்றைப் பிழைகள் இல்லாமல் உருவாக்குவது என்பதுதான். ஆனால் அது ஆதார் விஷயத்தில் சாத்தியப்படவில்லை.

பல்வேறு அடையாள அட்டைகளோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்ததாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான வேலைகளை பாஜக அரசு தொடங்கியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்களைக் கடந்த பின்னரும் கூட ஆதார் எண் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் வெளியான சிஏஜி அறிக்கையும் ஆதார் அட்டையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com