Marriage
MarriageFile image

காதலனை கரம்பிடிக்க கடல் கடந்து தனுஷ்கோடிக்கு வந்த இளம்பெண்; அதிகாலையில் நடந்த ட்விஸ்ட்!

தன் காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக கடல் கடந்து பெண் ஒருவர் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்துள்ளார்.
Published on

தன் காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக கடல் கடந்து பெண் ஒருவர் இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்துள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் அதிகாலை நேரத்தில் தனியாக நடந்து வந்த இளம்பெண்ணை பார்த்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு நடந்தது என்ன என பார்க்கலாம்.

இலங்கை, திரிகோணமலை மாவட்டம் ஆண்டான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் 24 வயதான விதுர்ஷியா. இவர்கள் 2003-ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமடைந்த போது இந்தியா வந்துள்ளனர். பிறகு பழனியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் வசித்துள்ளனர். இதனை அடுத்து 2016-ம் ஆண்டு இவர்கள் இலங்கை திரும்பிய நிலையில், விதுஷியா மட்டும் கல்விக்காக திரும்ப பழனி வந்து, தனியாக வாடகை வீட்டில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படிப்பை தொடர்ந்துள்ளார்.

அப்போது தன்னுடன் படித்த கவி பிரகாஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது, விதுர்ஷியாவின் விசா காலம் முடிவடைந்ததால் அந்த சமயத்தில் திருமணம் செய்ய முடியாத நிலை உருவானது.

இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றுள்ளார் விதுர்ஷியா. அங்கிருந்து இந்தியா வர இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பித்தபோது விதுர்ஷியாவுக்கு விசா மறுக்கப்பட்டது.

ஆனாலும் காதலனைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நினைத்து தலைமன்னாரில் இருந்து படகில் சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்தார். இதற்காக இலங்கை ரூபாய் 2 லட்சம் கொடுத்து வந்துள்ளார். இலங்கையில் இருந்த படகில் வந்த விதுர்ஷியாவை நள்ளிரவு அரிச்சல்முனை பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை அடுத்து அரிச்சல்முனை பகுதியில் அதிகாலை நேரத்தில் தனியாக நடந்து வந்த இளம்பெண்ணை பார்த்ததும் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடந்து அங்கு வந்த கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் க்யூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் அந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தங்க வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com