மங்களூரு: கொரோனா பயத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்

மங்களூரு: கொரோனா பயத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்
மங்களூரு: கொரோனா பயத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்
கொரோனா பீதியில் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
மங்களூரு அருகே பைக்கம்பாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ரமேஷ் (வயது 45) மற்றும் அவரது மனைவி குணா (வயது  35). இவர்களுக்கு திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகிறது. ரமேஷ் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் பணி செய்து வருகிறார். 
குழந்தை இல்லாத விரக்தியில் வாழ்க்கையை நடத்தி வந்த ரமேஷ்- குணா தம்பதியினருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பயந்திருந்தனர். ஏற்கனவே குணா நீரிழிவு நோயாளி என்பதால் கொரோனா வந்துவிட்டால் உயிர் பிழைப்பது கஷ்டம் என அந்த தம்பதியினர் கருதினர்.
இதனால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்று அனுப்பியுள்ளனர். அதில் ”எங்களை கொரோனா தொற்று தாக்கி விட்டதாகவும், நாங்கள் பிழைப்பது கடினம். எனவே நாங்கள் தற்கொலை செய்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.
இந்த ஆடியோவை கேட்டறிந்த போலீஸ் கமிஷனர் சசிகுமார், உடனே அவர்களிடம் தற்கொலை முடிவை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். அதன்பிறகு அவர்கள் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதனால் போலீஸ் கமிஷனர் சசிகுமார், தற்கொலை செய்யப்போவதாக கூறிய தம்பதியின் முகவரியை உடனடியாக கண்டுபிடித்து அங்கே செல்லுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார், இந்த தம்பதியின் முகவரியை கண்டுபிடித்து அவர்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். ஆனால் அதற்குள் தம்பதி தற்கொலை செய்துவிட்டதை பார்த்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பதி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும், ரூ.1 லட்சம் பணமும் வீட்டில் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், ''கொரோனா தொற்றால் நாங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறோம். நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது உடல்களை அடக்கம் செய்ய ஒரு லட்ச ரூபாய் பணம் வைத்துள்ளோம். அதை எடுத்து சூரத்கல் சரண் பம்ப் பேல் என்ற இடத்தில் இறுதிச் சடங்கு நடத்துங்கள்'' எனக் கூறப்பட்டிருந்தது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com