பெண் பத்திரிகையாளருடன் இருமுடி கட்டிய பெண் சபரிமலைக்கு பயணம்
காவல்துறை பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் ஒருவர் செய்தி சேகரிக்க சபரிமலை சன்னிதானம் சென்று கொண்டிருக்கிறார். அவரோடு, மற்றொரு பெண் ஒருவர் இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்கிறார். பம்பையில் இருந்து சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர் உள்பட இந்த 2 பெண்களும் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஐ.ஜி ஸ்ரீஜித் தலைமையில் இரண்டு பெண்களுக்கும் பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதுவரை எந்த பெண்களும் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், 2 பெண்கள் பயணம் செய்துள்ளனர். தலைகவசம் உள்ளிட்ட காவல்துறையின் பாதுகாப்பு உபகரணங்கள் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. பம்பை, எருமேலி, நிலக்கல் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க சபரிமலை செல்லும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து போராட்டங்கள் வலுக்கும் நிலையில், அதற்கு தீர்வு காண்பது குறித்து தேவசம் போர்டின் கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில் இவ்விவகாரத்தில் தேவசம் போர்டு உரிய முடிவை எடுத்துக்கொள்ள கேரள அரசு அனுமதித்துள்ளது. போராடி வருபவர்களுடன் எவ்வித சமரசத்துக்கும் தயார் என தேவசம் போர்டு அறிவித்திருப்பதையும் கேரள அரசு வரவேற்றுள்ளது.
அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யத் தயார் என தேவசம் போர்டு அறிவித்துள்ளதை வரவேற்பதாக கேரள அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்தார்.