’ஷாக் கொடுத்தல், அடித்தல் போன்ற தண்டனைகள்..’- மியான்மரில் சிக்கித்தவிக்கும் இளைஞரின் கதறல்

’ஷாக் கொடுத்தல், அடித்தல் போன்ற தண்டனைகள்..’- மியான்மரில் சிக்கித்தவிக்கும் இளைஞரின் கதறல்
’ஷாக் கொடுத்தல், அடித்தல் போன்ற தண்டனைகள்..’- மியான்மரில் சிக்கித்தவிக்கும் இளைஞரின் கதறல்

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அங்கு அடிமைப்படுத்தப்பட்டு, தாக்கியும், துன்புறுத்தியும் கஷ்டப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து தனியார் ஏஜெண்ட்டுகள் மூலம் பலர் ஐ.டி. வேலைக்காக துபாய் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணி இல்லை எனக்கூறி அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கேயும் பணி இல்லை எனக் கூறி அவர்களை அங்கும் இங்குமாய் அலைக்கழிக்கப்பட்டுனர். மேலும் கொடுமையாக தாக்கப்பட்டும், சட்டத்திற்கு எதிராக பணி செய்யுமாறும் வற்புறுத்தப்பட்டுள்ளனர். இங்கிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாக அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, பாதிக்கப்பட்டவர்களின் வீடியோ, போட்டோக்களை முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மியான்மரில் இருந்து மீட்க வேண்டும் என்று செல்வபெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள தமிழர் ஒருவர் கூறுகையில், ’’நான் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளேன். சென்னையில் ஏற்கெனவே ஒரு ஏஜெண்ட்டிடம் வேலை கேட்டிருந்தோம். அங்கிருந்து துபாய் அனுப்பிவிட்டார்கள். துபாய் வந்தபிறகு அங்கு ஒரு ஏஜெண்ட்டை பார்க்கச்சொன்னார்கள். பின்னர் துபாயில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை இருப்பதாகவும், அங்கு சென்று வேலை பார்க்கும்படியும் சொன்னார்கள். அந்த கம்பெனி இண்டர்வியூவில் கலந்துகொண்டபோது துபாயில் வேலையில்லை எனவும், தாய்லாந்தில் வேலை இருப்பதாகவும் அங்கு செல்கிறீர்களா? என்றும் கேட்டார்கள். நாங்கள் அனைவரும் செல்கிறோம் என்று கூறினோம். ஆனால் தாய்லாந்து அழைத்துவந்தபிறகு இங்கும் வேலையில்லை.

எங்களை மேசாக் என்கிற ஒரு இடத்திற்கு கூட்டிவந்து அங்கிருந்து ஆற்றை கடக்கவைத்து சட்டவிரோதமாக மியான்மருக்குள் அழைத்துவந்தனர். அதுவே எங்களுக்கு 10 நாட்களாக தெரியவில்லை. அங்கு எங்களுடைய போன் எல்லாவற்றையும் பிடுங்கி வைத்துக்கொண்டார்கள். இண்டர்நெட்டும் இல்லை. பின்னர் இண்டர்நெட் கிடைத்தபிறகு லொகேஷனை பார்த்தபோது, மியான்மரில் சட்டவிரோதமாக இருக்கிறோம் என்று தெரியவந்தது. அதனையடுத்து, தூதரகத்திற்கு போன் செய்தோம்.

இதற்கிடையே செய்த வேலையில் ஊழல் மற்றும் க்ரிப்டோகரன்சி நடப்பது தெரியவந்தது. அந்த வேலையை செய்யாவிட்டால் 5 ஆயிரம் டாலர் கட்டவேண்டும் அல்லது ஷாக் கொடுத்தல், அடித்தல், உணவு தராமல் இருத்தல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். ஒருநாளில் 5 கஸ்டமர்களை பிடிக்கவில்லை என்றாலும் இந்த தண்டைகள் எங்களுக்கு கிடைக்கும். இந்தவேலை பிடிக்கவில்லை என தூதரகத்திற்கு போன் செய்தபோது அவர்கள், மியான்மர் ராணுவத்தின் உதவியுடன் அழைத்து வந்தனர். 2 அல்லது 3 நாட்கள் விசாரணைக்குப் பிறகு ஆற்றை கடக்கவைத்தார்கள். தாய்லாந்தில் வைத்து மீண்டும் விசாரித்தார்கள். அங்கு ஜெயிலில் வைத்து சாப்பாடு, தண்ணீர் என எதுவும் கொடுக்காமல் கஷ்டப்படுத்தினார்கள்.

அதன்பிறகு மீண்டும் 10 நாட்கள் ஜெயிலில் வைத்தார்கள். இன்றுதான் எங்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். கோர்ட்டுக்குச் சென்று அபராதம் கட்டிவிட்டு, தூதரகத்தின் உதவியுடன் டிக்கெட் எடுத்து ஊருக்குச் செல்லலாம் என்று கூறியிருக்கிறார்கள். நாங்கள் கோர்ட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பி வருவோமா என்றுகூட தெரியவில்லை. நாங்கள் மொத்தம் 16 பேர் இங்கு இருக்கிறோம். அதில் ஒரு பெண்ணும் இருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கிறவர்கள் யாராக இருந்தாலும் எங்களுக்கு உதவி செய்யுங்கள்’’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இதையும் படிக்க: மியன்மார் மாஃபியா கும்பலின் பிடியில் தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com