ஹைதராபாத்: ‘மொட்டை அடித்தது குற்றமா?’-செயலியை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் ஊபர் ஓட்டுநர்
ஹைதராபாத் நகரில் ஊபர் கால் டாக்சி ஓட்டி வரும் ஓட்டுநரான நீடாரி ஸ்ரீகாந்த், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து அந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகிறார். மொட்டை அடித்த காரணத்தினால்தான் தனது முகத்தை அடையாளம் கண்டு அங்கீகரிக்க ஊபர் நிறுவனத்தின் அப்ளிகேஷன் தவறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஊபர் நிறுவனம் மறுத்துள்ளது.
அதோடு அவர் நிறுவனத்தின் நடத்தை விதிமுறைகளை மீறிய காரணத்தினால்தான் அப்ளிகேஷனை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக ஊபர் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. மொட்டை அடித்ததற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அந்நிறுவனம் சொல்லியுள்ளது.
“நானும் 25 நாளாக கம்பெனிக்கு சென்று எனது தடையை நீக்குமாறு கேட்டு வருகிறேன். ஆனால் அவர்கள் அதை நீக்கவே இல்லை. திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து வந்தது குற்றமா?” என ஓட்டுநர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்புகிறார்.
“இந்தியா முழுவதும் ஸ்ரீகாந்தைபோல பல்லாயிரக்கணக்கான ஓட்டுநர்கள் இதுமதிரியான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஓலா, ஊபர் என அனைத்து நிறுவனங்களும் இது மாதிரியான விஷயங்களில் ஒரே மாதிரியாக தான் செயல்படுகின்றன” என சொல்லி ஸ்ரீகாந்த் விவகாரத்தை ட்விட்டரில் போஸ்ட் செய்திருந்தார் அப்ளிகேஷனை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் ஓட்டுநர் சங்கத்தின் தெலங்கானா மாநில தலைவர் ஷேக் சலாவுதீன்.
இந்நிலையில் அவரை நேரடியாக தொடர்பு கொள்ளும்படி ஊபர் நிறுவனம் மெசேஜ் செய்துள்ளது.
கடந்த 2019 முதல் ஊபர் நிறுவனத்திற்கு டாக்சி ஓட்டி வருகிறார் ஸ்ரீகாந்த். மொத்தம் 1428 ட்ரிப் மேற்கொண்டுள்ளார். 23 வயதான அவருக்கு 4.67 ரேட்டிங்கும் அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.