ஒரே பெண்ணை காதலித்த இரு 10ம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை!
ஒரே பெண்ணை காதலித்த விவகாரத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ரவி தேஜா, மகேந்தர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியை காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது அவர்களுக்குள் தெரியாமல் இருந்ததாகத் தெரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே பெண்ணை இருவரும் காதலிப்பதை அறிந்த அந்த மாணவர்கள், மனமுடைந்து காணப்பட்டனர்.
இந்நிலையில், அந்த மாணவர்கள் இருவரும் பள்ளி அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மது அருந்தி இருவரும் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் இருவரின் அலறும் சத்தத்தை கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், மகேந்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் ரவிதேஜாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவிதேஜாவும் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மது பாட்டில்களுடன் ஒரு செல்போனும் இருப்பது கண்டறியப்பட்டது. செல்போன் ஆதாரமாக ரவிதேஜா மற்றும் மகேந்திராவுடன் வேறு யார் வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு படித்து வரும் சக மாணவர்கள் ஐந்து பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் மூன்றாவது நபரின் தலையீடு இருக்க வாய்ப்புள்ளதாக உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதனால், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உயிரிழந்த இரு மாணவர்களும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பெண்ணை காதலித்த சக மாணவர்கள் இருவர் பெட்ரோல் உற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜெகத்யாலா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.