’இந்தி, மராத்தி மட்டும்தான்’: புனேவில் ’டிக் டாக்’ திரைப்பட விழா!
புனேவில், டிக் டாக் திரைப்பட விழா நடத்தப்பட இருக்கிறது. இதில் 12 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
இளைஞர்களை அதிகம் கவர்ந்த ஒன்றாக, ‘டிக்டாக்’ செயலி இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சி யாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த செயலி, இளம் தலை முறையினர் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இளம் பெண்களும் சிறுவர்களும் வயதான பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். பொழுதுபோக்கு எனக்கூறிகொண்டு டிக் டாக் வீடியோவுக்காக அபாயகரமான இடங்களில் நின்று வீடியோ எடுப்பதால் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ’டிக் டாக்’ திரைப்பட விழா, புனேவில் நடத்தப்பட இருக்கிறது. இந்த விழாவை நடத்தும் பிரகாஷ் யாதவ் என்பவர் கூறும்போது, ‘’டிக் டாக் அனைத்து பகுதியிலும் டிரெண்டிங்காக இருக்கிறது. டிக் டாக் செயலிக்காக ஏராளமானோர் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். பல மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே நின்று ’டிக் டாக்’குக்காக வீடியோ எடுப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்று இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விழாவில் இந்தி மற்றும் மராத்தியில் வெளியான டிக் டாக் வீடியோக்கள் மட்டும் பரிசீலிக்கப்படும்’’ என்றார். இதற்கு வீடியோக்களை அனுப்ப, வரும் 20 ஆம் தேதி கடைசி நாள்!
சிறந்த காமெடி, குணசித்திர நடிப்பு, சிறந்த ஜோடி, சமூக விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் என்பது உட்பட 12 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன. முதல் பரிசு ரூ.33,333. இரண்டாம் பரிசு ரூ.22,222. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் கேடயமும் உண்டு, என்கிறார் பிரகாஷ்.