'விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியும்..' - களைகட்டிய ’வைப்ரன்ட் குஜராத்’ சர்வதேச வர்த்தக மாநாடு!

குஜராத் தலைநகர் காந்தி நகரில் 'வைப்ரன்ட் குஜராத்' என்ற பெயரில் சர்வதேச வர்த்தக மாநாடு தொடங்கியுள்ளது.
வைப்ரன்ட் குஜராத்
வைப்ரன்ட் குஜராத்twitter

குஜராத் தலைநகர் காந்தி நகரில் 'வைப்ரன்ட் குஜராத்' என்ற பெயரில் சர்வதேச வர்த்தக மாநாடு தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். 34 நாட்டு அரசுகள் பங்குதாரர் நாடுகளாக உள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயித் அல் நஹ்யான் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலக நாடுகளின் படிநிலைகள் வேகமாக மாறி வரும் நிலையில் இந்தியா உலகின் நண்பனாக உருவெடுத்து வருவதாக பேசினார். இந்தியா உலகின் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக அடுத்த சில ஆண்டுகளில் உருவெடுக்கும் என பெரும்பாலான பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடைந்ததாக மாற்றுவதே தங்கள் அரசின் பிரதான இலக்கு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்வில் பேசிய தொழிலதிபர் கவுதம் அதானி தங்கள் நிறுவனம் குஜராத்தில் மேலும் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்ய உள்ளதாகவும் தாங்கள் அமைக்க உள்ள பசுமை எரிசக்தி பூங்காக்கள் விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரியும் என்றும் தெரிவித்தார். இந்த ஆலைகள் மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகிலேயே ஒரே இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய இரும்பு ஆலையை 2029ஆம் ஆண்டிற்குள் குஜராத்தில் அமைக்கப்போவதாக ஆர்சிலார் மிட்டல் நிறுவனத்தின் செயல் தலைவர் லட்சுமி மிட்டல் தெரிவித்துள்ளார். இதில் ஆண்டுக்கு 2.4 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

டாடா நிறுவனம் குஜராத்தின் தோலரா (Dholera) பகுதியில் செமிகண்டக்டர் ஆலையும் லித்தியம் அயான் பேட்டரி ஆலையும் அமைக்கும் என டாடா சன்ஸ் தலைமை அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.

குஜராத்தின் ஹாசிராவில் இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் ஆலை அமைக்கப்படும் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதுவரை தாங்கள் செய்துள்ள முதலீடுகளில் 3ல் ஒரு பங்கு குஜராத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய பொருளாதாரம் 2047ஆம் ஆண்டில் 35 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மாருதி சுசுகி நிறுவனம் குஜராத்தில் 2ஆவது கார் ஆலையை அமைக்கும் என அதன் தலைவர் தோஷிரோ சுசுகி தெரிவித்தார். இதன் மூலம் குஜராத்தில் தங்கள் கார் உற்பத்தி ஆண்டுக்கு 40 லட்சமாக உயரும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com