ஆதிபுருஷ், ராமருடன் சீதை
ஆதிபுருஷ், ராமருடன் சீதைtwitter

”சீதா தேவி” பிறந்தது எங்கே? நேபாளம் உரிமை கோருவதன் புராண பின்னணி என்ன? காலம்கடந்தும் தொடரும் விவாதம்

பொறுமைக்கு உதாரணமாக நிலமகளைச் (பூமா தேவியின் மகள்) சொல்வது வழக்கம். ஜனகனின் மகளும், ராமரின் மனைவியுமான சீதா தேவி அந்த நிலமகள். இந்த சீதா தேவியின் பிறப்பிடம் தொடர்பாக நீண்டகாலமாக சண்டை நடந்துகொண்டிருக்கிறது. அது, தற்போதும் வெடித்துள்ளது.

‘ஆதி புருஷ்’ படம் மூலம் வெடித்த சர்ச்சை

இராமாயண காவியத்தை மையமாக வைத்து ‘ஆதி புருஷ்’ என்கிற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட படக்குழு, நடிகை கிருத்தி சனோன் நடித்திருந்த சீதா கதாபாத்திரத்தை குறிப்பிட்டு, ‘சீதா இந்தியாவின் மகள்’ எனப் பிரபலப்படுத்தியது. சீதா தேவியின் பிறந்த இடம் குறித்து தவறாக திரைப்படம் காட்டுவதாகவும், அதைத் திருத்தவில்லை என்றால், காத்மாண்டு தலைநகருக்குள் எந்த இந்தியப் படமும் திரையிடப்படாது என பெருநகர மேயர் பலேன் ஷா எச்சரித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ”ஆதிபுருஷ் என்ற இந்திய திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சீதா இந்தியாவின் மகள்’ என்ற வசனத்தை நேபாளம் ஏற்றுகொள்ளாது. சீதா நேபாளத்தில் பிறந்தவர். இதை இந்தியாவில் உண்மையாகாத வரைவில், எந்த ஒரு இந்தி படமும் காத்மாண்டு பெருநகரத்தில் உள்ள திரையரங்குகளில் ஓட அனுமதிக்கப்படாது. இதைச் சரி செய்ய 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்னை சீதாவுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து, நேபாளத்தை சேர்ந்த தணிக்கை முழுவும் இதே காரணத்திற்காக ஆதிபுருஷ் படத்தை அனுமதி மறுக்க முடிவு செய்தது. இதனால், அன்றுமுதல் பிரச்னை வெடிக்கத் தொடங்கியது.

ஜனக்பூர் - சீதாமர்ஹி: சீதா தேவி பிறந்த இடம் எது?

ஏற்கெனவே சீதா தேவியின் பிறப்பிடம் குறித்து கடந்த காலங்களில் சர்ச்சைகள் வெடித்து அடங்கிய நிலையில் மீண்டும் இதே விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. சீதா தேவி பிறப்பிடம் குறித்து, சிலர் தெற்கு நேபாளத்தில் உள்ள மிதிலா அரசாட்சியில் அமைந்துள்ள ஜனக்பூர் என்றும், இன்னும் சிலரோ பீகாரில் உள்ள சீதாமர்ஹி எனவும் கூறுகின்றனர். இந்த சீதாமர்ஹிகூட, நேபாள எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வடக்கு பீகாரின் பகுதி எனச் சொல்லப்படுகிறது.

2017இல் மாநிலங்களவையில் வெடித்த விவாதம்!

சீதா தேவி பிறப்பிடம் தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 'சீதை பிறந்த இடமான பீகார் மாநிலம், சீதாமர்ஹி பகுதியை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?' என பாஜக உறுப்பினர் பிரபாத் ஜா கேள்வியெழுப்பினார். இதற்கு, அப்போதைய மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ”ராமாயணம் தொடர்புடைய இடங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தில் சீதாமர்ஹியும் அடங்கியுள்ளது” என தெரிவித்தார். மேலும், ”சீதையின் பிறந்த இடம் என்பது நம்பிக்கை தொடர்புடையது. சீதாமர்ஹியில் இதுவரை தொல்லியல் துறை ஆய்வு எதுவும் நடைபெறவில்லை” என்றும் அமைச்சரின் பதிலில் கூறப்பட்டிருந்தது.

மத்திய அமைச்சர் அளித்த விளக்கம்!

இதையடுத்து, அமைச்சரின் பதிலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், அப்போதைய சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயாபச்சன், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் அனில் குமார் சஹானி, காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு திக்விஜய் சிங், ’சீதாமர்ஹியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்படவில்லை. எனவே, அங்குதான் சீதை பிறந்தார் என்பதற்கான வரலாற்றுப்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை மத்திய அரசே மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறது” என்றார். இதைத் தொடர்ந்து, தனது பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், சீதை பிறந்த இடம் குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை என்றும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா விளக்கமளித்தார்.

புராணங்கள்படி சீதா தேவி எங்கு பிறந்தார்?

வால்மீகியின் ராமாயணம் மற்றும் கம்பனின் தமிழ் இதிகாசமான ராமாவதாரத்தில், சீதை பீகாரின் சீதாமர்ஹி என்று நம்பப்படும் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீதா அங்கு கண்டெடுக்கப்பட்டதாலேயே அவ்விடம் சீதாமர்ஹி என அழைக்கப்படுவதாகவும், சீதாவுக்கு என அங்கே ஒரு கோயில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்து புராணங்களின்படி, சீதா தேவியின் உண்மையான பிறந்த இடம் இன்றைய நேபாளத்தில் அமைந்துள்ள ஜனக்பூர் என்று நம்பப்படுகிறது.

அதேநேரத்தில், சீதா தேவி நேபாளத்தில் பிறந்ததாகப் பலரும் சொல்லும் வேளையில், அவர் பீகாரில் பிறந்தது எனச் சொல்லப்படுவது ஏன்?

புராணங்கள்படி, சீதா தேவி மிதிலையில் வளர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும், அந்த மிதிலை ராஜ்ஜியம் அப்போது நேபாளத்திற்கும் இந்தியாவின் பீகார் மாநிலத்திற்கும் இடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு எல்லைகள் பிரிக்கப்பட்டதால், மிதிலை நேபாள எல்லையுடன் இணைந்திருக்கலாம் என்பதே பல பேருடைய வாதமாக இருக்கிறது. இதனாலேயே சீதா தேவி, இந்தியாவில் பிறந்தவர் என்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com