அடேங்கப்பா.. இத்தனை ஏக்கரா? ஆக்கிரமிப்பில் ரயில்வே நிலங்கள்.. ஆய்வில் மத்திய அரசு!
இந்திய ரயில்வேவுக்குச் சொந்தமான நிலங்களில், 1,068.54 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது, ரயில்வே துறை. இத்துறைக்கு மொத்தம் சுமார் 4.99 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 1,068.54 ஹெக்டேர் (சுமார் 0.21%) நிலம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த விளக்கங்கள் மூலமாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வெளியான தரவுகளின் அடிப்படையில் வாயிலாகவும் இவ்விவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே நில ஆக்கிரமிப்பு சுமார் 32% அதிகரித்துள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் 810.31 ஹெக்டேராக இருந்த ஆக்கிரமிப்புப் பரப்பு, தற்போதைய நிலவரப்படி 1,068.54 ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
அதாவது இந்த அளவு என்பது, இந்தியா டுடே ஊடகத்தில் வெளியான கட்டுரையின்படி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தைப் போன்று ஏறக்குறைய 42 விளையாட்டு மைதானங்களை அமைக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம், சுமார் 63 ஏக்கர் அல்லது ஏறத்தாழ 25.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சொல்லப்போனால், கால்பந்து அடிப்படையில், அதே பரப்பளவு சுமார் 1,496 ஃபிஃபா அளவிலான கால்பந்து மைதானங்களுக்குச் சமமாகும் என்கிறது அந்தக் கட்டுரை. மறுபுறம், கடந்த 5 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பில் இருந்து வெறும் 98.02 ஹெக்டேர் ரயில்வே நிலம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக மீட்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலங்கள் மேலும் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவும், தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் அதிநவீன தொழில்நுட்பங்களை ரயில்வே அமைச்சகம் பயன்படுத்தி வருகிறது

