திமுக, காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளில் மட்டுமா! ஆளும் பாஜகவிலும் வாரிசு அரசியல் தொடர்கிறது தானே?!

ஆளும் பாஜகவிலும் வாரிசு அரசியல் இருக்கின்றன எனச் சொல்லி அதற்கான பட்டியலையும் வெளியிட்டு அசர வைக்கின்றன, எதிர்க்கட்சிகள்.
பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்twitter

வாரிசு அரசியல் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் கோலோச்சப்படுகிறது. முக்கியமாக, வாரிசு அரசியல் மன்னர்கள் காலந்தொட்டே இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் வாரிசு அரசியல் என்பது மகன், மகள், பேரன், பேத்தி இவர்களைத் தவிர சகோதரன், சகோதரி, மாமன், மைத்துனன், மருமகன்... என இன்னும் பிற உறவுகளும் அடங்கும் (குடும்ப அரசியல்). வாரிசுக்குக் கட்சியின் பலமிக்க பதவிகள் வழங்கப்படுவதால்தான், இவர்கள் முதன்மையாக்கப் படுகின்றனர். இப்படியான வாரிசு, குடும்ப அரசியல் இந்தியாவில் அதிகம் பேசப்படுவதற்கு முக்கியக் காரணம், நாட்டில் இருக்கும் முக்கால்வாசி கட்சிகள் வாரிசு அரசியலைக் கொண்டிருப்பதுதான்.

modi
moditwitter

இந்த நிலையில், நேற்று (ஜூன் 27) மத்தியப் பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, போபால் நகரில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”திமுகவுக்கு வாக்களித்தால், கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், சோனியா காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டிற்கு உகந்தது அல்ல” என்றார்.

பிரதமர் மோடி நேற்று மட்டுமல்ல, இதற்கு முன்பும் வாரிசு அரசியல் குறித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடி தவிர, பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் வாரிசு அரசியல் குறித்துப் பேசி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக மட்டுமின்றி, இன்னும் பல்வேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளிலும் அரசியல் வாரிசு நீள்கிறது.

தமிழக அரசியல் தலைவர்கள்
தமிழக அரசியல் தலைவர்கள்twitter

அதுபோல் தமிழகத்தில் அதிமுக, தேமுதிக, த.மா.கா., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. இக்கட்சிகளைத் தவிர பாஜகவிலும் அரசியல் வாரிசு உள்ளது என்பதுதான் பல பேருடைய கருத்தாக இருக்கிறது. ஆனால், இது பரவலாக வெளியில் தெரிவதில்லை. பாஜக தன்னை வாரிசு அரசியல் இல்லாத கட்சி என்று சொல்லிக் கொள்கிறதே தவிர, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் மூத்த தலைவர்களில் பலர், தங்களுடைய வாரிசுகளை அரசியல் வாரிசுகளாக்கி அழகு பார்த்து வருகின்றனர் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான விமர்சனமாக இருக்கிறது.

பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான விஜயராஜ சிந்தியாவின் வாரிசுகள் இன்றுவரை ராஜஸ்தான் அரசியலிலும், மத்தியிலும் ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த வாரிசைத் தவிர, முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், பிரேம்குமார் தூமல், சிவ்ராஜ் சிங் சௌஹான், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, வீரேந்திர சக்லேச்சா. ரமண் சிங் ஆகியோரின் வாரிசுகள் பாஜகவில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். அதுபோல் தேவேந்திர பட்னாவிஸ், யோகி ஆதித்யநாத், பெமா காண்டு ஆகியோரின் குடும்ப வாரிசுகளும் பாஜகவில் கோலோச்சி வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத், பெமா காண்டு
யோகி ஆதித்யநாத், பெமா காண்டுtwitter

மேலும், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, பூனம் மகாஜன், பங்கஜ் சிங், ப்ரீத்தம் முண்டே, விவேக் தாகூர், பன்சூரி ஸ்வராஜ் ஆகியோரும் குடும்ப அரசியல் வாரிசுகளே. அதுபோல் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சகோதர வாரிசுகளும் அரசியலில் இடம்பிடித்துள்ளனர். இப்படி, பாஜகவின் அரசியல் வாரிசுகளின் பட்டியலை இதர கட்சிகள் வெளியிட்டு, அக்கட்சியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

ஏன் விமர்சனங்கள் எழுகிறது?

வாரிசு, குடும்ப அரசியலை பொறுத்தவரை ஏன் இவ்வளவு விமர்சனங்கள் எழுகிறது என்றால் கட்சியில் உழைத்த பலர் இருக்க ரத்த வாரிசு என்பதாலே முக்கிய பொறுப்புகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் பலருக்கு கிடைக்கிறது என்பதே இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம். ஒரு குடும்பத்தில் இருந்து பலரும் கட்சியில் இணைந்து பணியாற்றுவது என்பது இயல்பான ஒன்றுதான். அதனை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், முன்னுரிமை யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் வாரிசு, குடும்ப அரசியல் விமர்சனங்கள் எழுகின்றன.

மொத்தத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அரசியல் வாரிசுகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டனர் என்பதே உண்மை.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com